வாழ்க்கை குறித்து பலருக்கும் பல்வேறு புரிதல்கள் உண்டு. ஒவ்வொருவரும் வெற்றி குறித்தும், வாழ்க்கை குறித்தும் வெவ்வேறு விளக்கங்கள் உண்டு. அவ்வாறு வாழ்க்கை பற்றிய புரிதல்களைத் திரைப்படமாக வெளியிட்டு, நமது புரிதல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய பாலிவுட் திரைப்படங்களை இங்கு பார்ப்போம். 


1. தில் தடக்னே டோ (2015)



இந்தப் படத்தில் காட்டப்படும் உயர்தர வாழ்க்கையைக் கழித்துவிட்டால், இது மிகச் சிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. வியாபார ஒப்பந்ததைப் போல மகளின் திருமணத்தை முடிவு செய்யும் பெற்றோர் முதல் தன் சகோதரியை மோசமான திருமண உறவில் இருந்து மீட்கும் சகோதரனின் கதாபாத்திரம் வரை இதில் மிகச் சிறந்த சித்தரிப்புகள் உண்டு. 


 


2. யே ஜவானி ஹே தீவானி (2013)



இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள காதல் கதை சற்றே பிரச்னைக்குரிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்றாலும், இந்தப் படம் நட்பின் மகத்துவத்தைக் காட்டும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தன் உயிர் நண்பன் அவி மீது காதல் கொண்டிருந்த அதிதி, அதில் இருந்து மீண்டு திருமணம் செய்துகொள்ளும் கதையாக இந்தப் படம் உருவாகியிருந்தது. மேலும், அடுத்தடுத்து பல்வேறு கதாபாத்திரங்களின் கதைகளும் இந்தப் படத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. 


 


3. ஜப் வி மெட் (2007)



வாழ்க்கையில் அனைத்தும் எதிர்பாராதது என்பதைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் துரோகம், காதல், நட்பு, உறவு, தன்னைத் தானே நேசித்துக் கொள்தல், குடும்பம் மீதான ப்ரியம் முதலான பல்வேறு பண்புகள் மெலிதாகத் தொட்டுச் செல்லப்பட்டு, அழகான காட்சிகளால் உருவாகியிருக்கிறது இந்தப் படம். 


 


4. ஜிந்தகி நா மிலேகி தோபாரா (2011)



உயர்தர வாழ்க்கையைச் சித்தரித்து இருந்தாலும், இந்தப் படம் வாழ்க்கை என்பது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம் என்ற கதையைத் தொட்டிருந்தது. வாழ்க்கையின் மறைக்கப்பட்ட அர்த்தம் என்ன என்பதைத் தேடும் படமாகவும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. நட்பு, உறவு, வாழ்க்கையைக் கொண்டாட்ட மனநிலையில் அணுகுதல் முதலானவற்றை இந்தப் படம் நமக்குக் கற்றுத் தருகிறது. 


 


5. வேக் அப் சித் (2009)



தான் விரும்பியதை ஒரு பெண் செய்வதையும், அதைத் தன் துறையாக மாற்றிக் கொண்டு அதில் வெற்றி பெறுவதையும் காட்டிய இந்தப் படம் வெளியான போது, அப்போதைய மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. ஒரு காதல் உறவில் ஆணை விட அதிக வயது கொண்ட பெண்ணைக் காட்டியதோடு, வாழ்க்கை குறித்து அதன் வழியாக எழும் புரிதலையும் இந்தப் படம் சித்தரிக்கிறது. 


 


6. தில் சாஹ்தா ஹே (2001)



வாழ்க்கையில் நல்ல நண்பர்களின் தேவையை உணர்த்தும் படம் இது. மூன்று நண்பர்களும், அவர்களது நட்பு அவரவர் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் இந்தப் படம் பேசுகிறது. அக்‌ஷய் கண்ணா, சைஃப் அலி கான், ஆமிர் கான் ஆகியோர் மூன்று நண்பர்களாக இந்தப் படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். 


 


7. உடான் (2010)



டீனேஜ் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றியது இந்தப் படம். குழந்தைகள் மீது சுமையாக இருக்கும் கல்வி முறையையும், பெற்றோரின் அளவு கடந்த எதிர்பார்ப்புகளையும் இந்தப் படம் உணர்த்துவதாக உருவாக்கப்பட்டிருந்தது.