National Film Awards 2022: 68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஐந்து விருதுகளை வாங்கிய சூரரைப் போற்று குழுவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். டெல்லியில் நடந்து வரும் இந்த விழாவில் சிறந்த திரைப்படம் சூரரைப் போற்று, சிறந்த நடிகர் சூர்யா (சூரரைப் போற்று), சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று), சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று), சிறந்த திரைக்கதை சுதா கொங்கரா (சூரரைப் போற்று) ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி 68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்தது. அதில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் குடியர்சுத் தலைவர் திரௌபதி முர்மு நாடு முழுவதும் விருதுக்கு அங்கீகரிக்கப்பட்ட திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கினார். இதில் தமிழ் திரையுலகிற்கு மட்டும் மொத்தம் 10 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவின் 2டி எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் ஐந்து விருதுகளை வாங்கி குவித்துள்ளது. அதிலும், இத்திரைப்படத்திற்காக விருது வாங்கியுள்ள ஐவரும் முதல் முறையாக தேசிய விருது வாங்கியுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சுதா கொங்கரா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதல் முறையாக தேசிய விருது வாங்கியுள்ளனர்.
அதிலும் நடிகர் சூர்யாவிற்கு ஏற்கனவே அவர் நடிப்பில் வெளியான மாயாவி, பிதாமகன் , ஏழாம் அறிவு ஆகிய திரைப்படங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், சூரரைப் போற்று திரைப்படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 22ம் தேதி தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருது அறிவிக்கப்பட்டது.