டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடந்தது. விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் விழாவில் மொழிவாரியாக விருதுகள் வழங்கப்பட்டன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருது இந்திய சினிமாவில் உச்ச விருதாக கருதப்படுகிறது. இதற்கு முன் செவாலியே சிவாஜி கணேசன், கே. பாலச்சந்தர், அமிதாப் பச்சன் ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.
தமிழில் சிவாஜி, பாலசந்தருக்கு பிறகு ரஜினி இந்த விருதை பெற்றார். விருதினை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். ரஜினி விருது பெறும்போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்
விருது வழங்குவதற்கு முன்னதாக ரஜினி குறித்த ப்ரோமோ வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், மோகன்லால், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகை குஷ்பூ, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் ரஜினியை பாராட்டி பேசினர்.
விருதினை பெற்றுக்கொண்ட பிறகு பேசிய ரஜினி, ”விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி
இந்த விருதை என் குருநாதர் பாலச்சந்தர், என் நண்பர் ராஜ் பகதூர், அண்ணன் சத்யநாராயணா என்னை இயக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், என்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கு நன்றி. தமிழ்நாடு மக்கள்தான் இந்த விருதுக்கு காரணம்” என்றார்.
முன்னதாக, ரஜினிக்கு 2019ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அவருக்கு விருது வழங்காத சூழல் நிலவியது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ரஜினி பத்மபூஷன், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: National Film Awards: கெத்து காட்டிய அசுரன்: இயக்குனர் வெற்றிமாறன்... தயாரிப்பாளர் தாணு தேசிய விருது பெற்றனர்!