தேசத்தின் கண்ணாடிகளாக விளங்கும் ஒரு சில கலைஞர்களில் முதன்மையானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரின் வாழ்நாள் முழுவதும் தேசத்தின் மீதும், தேச தலைவர்கள் மீதும் அதீத பற்றுடன் வாழ்ந்தவர். அதன் பிரதிபலிப்பாக பல வரலாற்று தேச தலைவர்கள், விடுதலை போராட்ட வீரர்கள் போன்ற காலத்தால் போரட்டப்படுபவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடித்ததன் மூலம் அவர்களை கண் முன்னே திரையில் கொண்டு வந்து நிறுத்தினார்.


 




அந்த வகையில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து துணிச்சலாக குரல் கொடுத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரை கைது செய்த ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். அந்த மாபெரும் தேசபக்தி கொண்ட வீரரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது. 1948-ல் தொடங்கப்பட்ட முயற்சி பலரிடமும் சென்று கைமாறி பின்னர் சிவாஜி நாடக மன்றம் மூலம் நாடகமாக அரங்கேறியது. நாடகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை பார்த்த பி.ஆர்.பந்துலு அதனை தனது பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் படமாக்க முடிவெடுத்தார். அந்த வகையில் 1959ம் ஆண்டு இதே நாளில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 65 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.



'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம் திரையரங்கில் வெளியானதும் மிக பெரிய சூறாவளியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தில் இடம்பெற்ற போர் காட்சிகள் அனைத்தும் அத்தனை தத்ரூபமாக அமைக்கப்பட்டு இருந்தது தனி சிறப்பு. 175 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. சர்வதேச விருது பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையையும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் பெற்றது. கொய்ரோவில் நடைபெற்ற ஆப்ரோ - ஏஷியன் விருது வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர் என மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றது.


 




வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்த ஜெமினி கணேசன், பத்மினி, ஓ.கே.ஏ. தேவர், வி.கே. ராமசாமி, ஜாவர் சீதாராமன் என அனைவரும் கதாபாத்திரங்களோடு ஒன்றி போய் வாழ்ந்து இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன் உருவம் கூட அறியாத மக்களுக்கு இப்படம் வெளியான பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன் இப்படி தான் இருப்பார் என தன்னுடைய தத்ரூபமான நடிப்பால் பிம்பத்தை ஏற்படுத்தி இன்று வரை கொண்டாட செய்தவர் சிவாஜி கணேசன். அவரின் ஒவ்வொரு வசனமும் சண்டை காட்சிகளும் திரையரங்கத்தையே அதிர வைத்தது.


1984ம் ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பதிப்பையும் மக்கள் கொண்டாடி தீர்த்தனர் என்றால் 2015ம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகி இரட்டிப்பு வரவேற்பையும் வசூலையும் ஈட்டியது. தமிழ் சினிமாவில் சிறந்த தேசப்பற்று திரைப்படங்களில் நிச்சயம் முதன்மையானது சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம்.