தமிழ் சினிமா எண்ணற்ற நகைச்சவை நடிகர்களை கடந்து வந்துள்ளது. அதிலும் நகைச்சவை நடிகர்களுக்கு பாடி லாங்குவேஜ் மிக மிக முக்கியம். அதை கனகச்சிதமாக செயல்படுத்தி மக்களை கவனத்தை பெற்று அவர்களை தனது நகைச்சுவையால் கட்டி போட்டவர் நடிகர் நாகேஷ். எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் நாகேஷ் தனது உடல்மொழியால் அதை தூக்கி நிறுத்துவதில் வல்லவர். 



தவிர்க்க முடியாத நடிகர் :


இந்த மூஞ்சியெல்லாம் நடிகனா? என ஏளனமாக விமர்சனங்களை எல்லாம் தாண்டி 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சிம்மாசனத்தை அடைந்து தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் நாகேஷ். அந்த நிலையை அவர் அடைய அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் ஏராளம். 


நடிப்பில் பி.ஹெச்டி :


எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்ஷ்ங்கர் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வில்லன், பெண் வேடம், குணச்சித்திர கதாபாத்திரம், சீரியஸ் கேரக்டர் என அவர் நடிப்பில் தொடாத இடங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு நடிப்பில் பி.ஹெச்டி பெற்றவர். 



பாலச்சந்தர் - நாகேஷ் நட்பு : 


இயக்குநர் பாலச்சந்தருக்கும் நடிகர் நாகேஷுக்கும் இடையே இருந்த நட்பானது மிகவும் ஆழகானது. நாடங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட நாகேஷ், படங்களில் நடித்து வந்தாலும் நாடகங்களை தேடி ஓடினார். அப்போது அவருக்கு சரியான ஒரு தேர்வாக இருந்தவர் பாலச்சந்தர்.


பாலச்சந்தர் நாடகத்தில் நாகேஷ் : 


அந்த சமயத்தில் நாகேஷ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்ததால் நாடகத்தில் நாகேஷுக்கு வாய்ப்பு தர சற்று யோசித்துள்ளார் பாலச்சந்தர். அதனால் பாலச்சந்தர் ஒரு முடிவு செய்து நாகேஷை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து ஒரு அற்புதமாக நாடக கதையை உருவாக்கினார். 


சர்வர் சுந்தரம் உருவான கதை: 


ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட சோகத்தில் இருந்தாலும் அதே நேரத்தில் நகைச்சுவையுடனும் இருக்க வேண்டும் என்ற கதாபாத்திரத்தை மனதில் வைத்து நாகேஷ் கதாபாத்திரத்தை உருவாக்கினார். ஆனால் ஒரு காமெடியனாக நாகேஷை பார்த்த மக்கள் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் அவரை ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்துள்ளது. 


முதல் காட்சியில் கையில் அடுக்கிய டபரா செட்களுடன் நாகேஷ் தனது வித்தியாசமான உடல்மொழியுடன் என்ட்ரி கொடுத்தது பார்த்த மக்கள் கரகோஷமிட்டனர். அதுவே அந்த நாடகத்தின் பாதி வெற்றியை உறுதி செய்தது. 



கதறிய பார்வையாளர்கள் : 


சர்வரோக இருந்த நாகேஷ் பின்னர் மிகவும் பிரபலமான ஒரு நடிகனாக வளர்ச்சி அடைந்ததும் தான் விரும்பிய பெண்ணிடம் போய் தன்னுடைய காதலை சொல்ல பூங்கொத்துடன் சொல்கிறார். ஆனால் அந்த பெண்ணோ நான் உங்களை நண்பனாக தான் பார்த்தேன் என்றதும் அப்படியே உடைந்து போன நாகேஷ் கையில் குப்பைத்தொட்டியுடன் திரும்புகிறார். அதற்கான காரணம் கேட்ட போது மறந்ததும் அந்த பெண் பூங்கொத்தை அதில் போட்டுவிடக்கூடாது என்பதற்காக எடுத்து செல்கிறேன் என சொன்னதும் அந்த பெண் மட்டும் கதறி அழவில்லை, அந்த நாடகத்தை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் கதறி அழுதுவிட்டனர். 


59 ஆண்டுகள் நிறைவு : 


இந்த நாடகம் தான் பின்னாளில் 'சர்வர் சுந்தரம்' என்ற பெயரில் 1964ம் ஆண்டு வெளியானது. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ்,  கே.ஆர்.விஜயா, முத்துராமன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 59 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.