தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய தூண்களான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரும் நேரடியாக 1964ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் படங்களின் மூலம் நேரடியாக மோதிக்கொண்ட ஒரு தருணம்!
எம்.ஜி.ஆரின் படகோட்டி!
மீனவ சமுதாயத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான தத்ரூபமான படம் 'படகோட்டி'. சரோஜாதேவி, நம்பியார், நாகேஷ், அசோகன், ஜெயந்தி, மனோரமா என நடிப்பு வித்தகர்கள் நடிப்பில் வெளியான இப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த இப்படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் ஹைலைட்டாக அமைந்தன!
மீனவ சமுதாயத்தினரின் வாழ்வாதாரத்தை மிகவும் தத்ரூபமாக இயல்பாக காட்சிப்படுத்திய படகோட்டி திரைப்படத்தின் மூலம் மீனவப் பகுதி மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு எகிறிய மவுசு இன்று வரை குறையவில்லை.
பாடல்களுக்கு பெயர் போன ‘படகோட்டி’ திரைப்படம் மூலம் தான் கவிஞர் வாலி பாடலாசிரியர் ஆனார். அறிமுகமான முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அன்று வெளியான இப்படத்தின் பாடல்களை 59 ஆண்டுகளை கடந்த பின்பும் இன்றைய தலைமுறையினர் மத்தியிலும் பிரபலம் என்பதைக் காட்டிலும், சிலிர்க்க வைக்கும் உணர்வை கொடுக்கிறது என்றால் அதுவே அப்படத்தின் பாடல்களின் தனிச்சிறப்பு!
9 கதாபாத்திரங்களில் கலக்கிய சிவாஜி
அதே 1964ம் ஆண்டு தீபாவளி நாளில் நடிகர் சிவாஜி கணேசனின் 100வது படமாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது 'நவராத்திரி'. திரையுலகத்தில் அடியெடுத்து வைத்த 12 ஆண்டுகளில் 100வது படத்தில் நடித்து சாதனை செய்த படம் என்பதால் சிவாஜி ரசிகர்கள் அப்படத்தை கோலாகலமாகக் கொண்டாடினர்.
ஒரு சிவாஜி என்றாலே படம் அப்ளாஸ் அள்ளும்.. அப்படி இருக்கையில் பயம், கோபம், சாந்தம், அற்புதம், இரக்கம், வீரம், வெறுப்பு, சிங்காரம், ஆனந்தம் என ஒன்பது நவரசங்களை பரிணாமங்களை தனது தனித்துமான நடிப்பால் முக பாவனைகளால் நெஞ்சுக்குள் நேரடியாக துளைத்தவர். சிவாஜியின் 9 பாத்திரங்களுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் நடிகையர் திலகம் சாவித்திரி நடித்திருப்பார்!
டிஜிட்டல் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் என எதுவுமே அறிமுகமே இல்லாத ஒரு காலகட்டத்திலேயே இவை அனைத்தும் சிவாஜி கணேசனால் சாத்தியமாகியது.
எது டாப்?
எம்.ஜி.ஆரின் படகோட்டி, சிவாஜி கணேசனின் நவராத்திரி இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தாலும் இந்த படம் தான் நன்றாக ஓடியது, அந்தப் படம் தான் 100 நாட்களை கடந்து ஓடியது என பல விமர்சனங்கள் எழுந்தன.
படகோட்டி படத்தை ஒரே திரையரங்கில் மட்டும் 100 நாட்கள் ஒட்டி விட்டு 100 நாட்கள் ஓடிய படம் என போஸ்டர் ஒட்டினார்கள் என சிவாஜி தரப்பினர் குற்றம்சாட்ட, சிவாஜியின் 100வது படம் என்பதால் 100 நாட்கள் ஓடிவிட வேண்டும் என படம் வெளியாவதற்கு முன்னரே பிளான் செய்து நான்கு திரையரங்கில் 100 நாட்கள் ஓட்டி எல்லா ஊர்களிலும் 100 நாட்கள் ஓடியதாக சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டனர் என எம்.ஜி.ஆர் தரப்பினரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்தனர்.
பலதரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து இருதரப்பினரும் குற்றம் சாட்டிக்கொண்டனர். இந்த சண்டைகள் பற்றி நடிகப் பேரரசர் எம்ஜிஆர் என்ற முகநூல் பக்கத்தில் எம்.ஆர்.ஆர் ரசிகர் ஒருவர் இதுகுறித்து பகிர்ந்துள்ளார்.
இப்படி பல சமாச்சாரங்களுடன் வெளியானாலும் படகோட்டி, நவராத்திரி இரண்டு படங்களுமே இன்று வரை கொண்டாடப்படும் திரைப்படங்கள். அதுவே இப்படங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!