ஜமீன் குடும்ப கதையின் பின்னணியோடு எதிரிகளிடம்  இருந்து நாட்டை காப்பற்றிய முன்னோர் காலத்து மன்னனும், இன்றைய மாடர்ன் மன்னனும் எப்படி போராடுகிறார் என்ற கதைக்களம் தான் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சூரி காம்போவில் வெளியான 'சீமராஜா' திரைப்படம் இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 



ஜமீன்தாரி முறை ஒழிப்பட்டாலும் நாட்டை ஆண்ட ஜமீன் குடும்பத்திற்கு அதே மரியாதையை கொடுத்து வரும் அழகான கிராமத்தின் ராஜாவாக சிவகார்த்திகேயன். கிராமத்து மக்களுக்கு நல்லது செய்யும் ஜமீன் குடும்பத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்தவராக லால் மற்றும் அவரின் மனைவியாக சிம்ரன். இடையில் ஏற்படும் சமந்தவுடனான காதல். எதிரியின் மகள் என தெரிந்ததும் சீமராஜா எடுத்த முடிவு என்ன? வில்லன் கிராமத்தை அபகரிக்கும் பிளானில் ஜெயித்தாரா? சீமராஜாவின் காதல் என்ன ஆனது என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். 


சீமராஜாவின் அப்பாவாக பிரேக்குக்கு பிறகு நடிக்க வந்துள்ள நடிகர் நெப்போலியன் தனது பங்கை சிறப்பாக ராஜாவாக செய்து இருந்தார். ஆனால் ஏனோ அப்பா - மகன் இடையே இருக்கும் அந்த பிணைப்பு பெரிய அளவில் வெளிக்காட்டப்படவில்லை. நகைச்சுவையோடு சேர்த்து கார்ப்பரேட் கம்பெனிகளால் அபகரிக்கப்படும் விவசாய நிலங்கள், அழிந்து வரும் விவசாயம், தமிழ் மானின் பாரம்பரியம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களையும் படத்தின் திரைக்கதையோடு சேர்த்தது படத்துக்கு வெயிட்டேஜ் கொடுத்தது. கலை இயக்குநர் முத்துராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்தின் கைவண்ணத்தில் அம்பாசமுத்திரம் பின்னணி மிக அழகாக பச்சைப்பசேல் என பார்வையாளர்களின் கண்களை குளிர்ச்சியாக்கியது.  


 



பி.டி டீச்சராக வரும் சமந்தா மீது சீமராஜாவுக்கு ஏற்படும் காதல், காமெடி, ஆக்ஷன் என ஒரு மசாலா கலவையாக கமர்சியல் படத்துக்கு தேவையான அம்சங்கள் நிறைந்து இருந்தன. இமானின் பின்னணி இசை மற்றும் மற்றும் பாடல்கள் அற்புதமாக பொருந்தி இருந்தன. எங்கேயோ கேட்டது போன்ற உணர்வு ஏற்பட்டாலும் காதுகளுக்கு இனிமை சேர்த்தது. 


பொழுதுபோக்கு ஹீரோ என்ற கேட்டகரியில் இருந்து ஒரு மாஸ் ஹீரோ லெவலுக்கு சிவகார்த்திகேயனை உயர்த்திய ஒரு திரைப்படம் சீமராஜா. பன்ச் வசனம் பேசுவது, அதிரடியான ஃபைட் சீன், கலக்கலான டான்ஸ் என பின்னியிருந்தார் சிவகார்த்திகேயன். வேற லெவலில் இருந்த சூரியின் நகைச்சுவை ட்ராக் படத்தை கலகலப்பாக்கியது. அவருக்கு இணையாக 'பனானா' பவுன்ராஜ் காமெடியும் ரசிகர்களின் கவனம் பெற்றது. 


புளித்து போன திரைக்கதை என்றாலும் அதையும் திறமையாக கையாண்டு இருந்தார் இயக்குநர் பொன்ராம். இடையில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் சாற்றி தேவையில்லாதது என தோன்றினாலும் அதற்காக மிகவும் மெனெக்கெட்டு இருந்தனர். கடம்பவேல் ராஜாவாக  14-ம் நூற்றாண்டு அரசனாக சிவகார்த்திகேயன் டபுள் ஆக்டிங் செய்து இருந்தார். சிறிய ரோலில் கீர்த்தி சுரேஷ் வந்து போனாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து இருந்தார். இருப்பினும் பிளாஷ்பேக் காட்சிகள் சற்று ஜவ்வு போல இருந்தது. 


சிம்ரனுக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் இப்படத்தில் பெரிய அளவில் எடுபடவில்லை. அந்த காட்சிகள் பார்வையாளர்களை கொஞ்சம் போர் அடித்தது. மற்றபடி பொழுதுபோக்கு படமாக வந்த "சீமராஜா" பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் வரவேற்பை பெற்றன.