கோலிவுட் பிரபலங்கள் பலர் போதை மருந்து பயன்படுத்தி வரும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர் .
முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்த் ஓரிரு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் ஏழாம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையின் போது நடிகர் ஸ்ரீகாந்த் தவறு செய்து விட்டேன் என கதறி அழுததாக கூறப்பட்டது.
அதேபோல் தன்னுடைய மகனும் - மகளும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அவர்களை கவனித்துக் கொள்ள நான் அவர்களுடன் இருக்க வேண்டும் எனக் கூறி ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த நிலையில், போதை மருந்து வழக்கு என்பதால் சிறப்பு நீதிமன்றத்தை நாடிதான் ஜாமீன் பெற முடியும் என நீதிபதி இவருடைய மனுவை தள்ளுபடி செய்தார். தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் மீது, மூன்று சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறார்கள் போலீசார்.
நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த தகவலின் அடிப்படியில், தற்போது கழுகு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி உள்ளார். இவர் முன்னணி இயக்குனர் விஷ்ணுவர்தனின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். ஏற்கனவே கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர். கிருஷ்ணா வீட்டில் இல்லாததால் போலீசார் அவருடைய குடும்பத்தினரிடம் சம்மனை கொடுத்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கிருஷ்ணாவின் போன் சுவிட்ச் ஆஃப் ஆனதோடு... கேரளாவுக்கு தப்பி சென்று விட்டதாகவும் தகவல் பரவியது.
எனவே கிருஷ்ணா உடனடியாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாத பட்சத்தில், அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி போதை மருந்து வழக்கில் சிக்கியுள்ள நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனி படை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது . எனவே விரைவில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.