பழம்பெரும் இயக்குனர் பி. மாதவன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடிப்பில் 1974ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் 'தங்கப்பதக்கம்'. படம் வெளியாகி 49 ஆண்டுகளை கடந்தும் இன்றும் தங்கம் என்றால் தரத்தில் சற்றும் குறைவில்லாத கலப்படமில்லாத தங்கமாக விளங்குகிறது 'தங்கப்பதக்கம்' திரைப்படம். அந்த அளவிற்கு சொக்கத் தங்கமாக இருந்தது சிவாஜி கணேசனின் மிடுக்கான நடிப்பு.
கடமை தவறாத போலீஸ் அதிகாரி:
போலீஸ் அதிகாரி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நிஜ போலீசையே மிஞ்சிய ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி. அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் அவரின் கம்பீரமான தோற்றம், கண்டிப்பு, அவரின் கடமை மீது இருக்கும் மரியாதையை மிக அழகாக உணர்ச்சிகரமாக நடித்து இருந்தார். கடமை தவறாத ஒரு கண்ணியமான போலீஸ் அதிகாரிக்கு மனைவியாக எப்படி ஒரு குணவதியாக மனைவி அமைவது பொருத்தமாக இருக்குமோ அப்படி சித்தரிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் கே. ஆர். விஜயா.
அவமானப்படுத்தும் மகன் :
சிவாஜி கணேசன் - கே.ஆர். விஜயா தம்பதியின் மகனாக ஸ்ரீகாந்த் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அப்பாவை அவமான படுத்தி பேசும் காட்சிகளில் இரக்கமின்றி அவர் பேசினாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சாமர்த்தியமாக பயன்படுத்தி கொண்டார். நடிகர் சோ கான்ஸ்டபிள் கதாபாத்திரத்திலும் கவுன்சிலர் கதாபாத்திரத்திலும் அவ்வப்போது வந்து போனார்.
ஒரு ஒழுக்கமான போலீஸ் அதிகாரியாக தனது மகன் மீது காட்டும் கண்டிப்பு அவனை அவருக்கு எதிரான வெறுப்பை சம்பாதித்து கருத்து வேறுபாட்டை உண்டாகும் இடங்களில் இருவரும் மிகவும் நேர்த்தியாக யதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் அந்த வெறுப்பு பின்னாளில் தந்தையை பழிவாங்கும் அளவிற்கு கதையை நகர்த்தியது படத்தின் பலத்தை சற்று குறைத்தது.
வசூலில் சாதனை :
தங்கப்பதக்கம் படம் வெளியான காலகட்டத்தில் அதிகம் வசூலித்த திரைப்படமாக சாதனை படைத்தது. திரையரங்குகள் எங்கும் காட்சிகள் வழிந்தோடியது. படம் ஐந்து லட்சத்திற்கு மேல் வசூலித்து தூள் கிளப்பியது. எம்.ஜி.ஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் ஒரு பக்கம் திருவிழா கோலம் போல காட்சியளித்த திரையரங்குகளை பார்த்த சிவாஜி கணேசன் ரசிகர்கள் மலைத்து போக அப்படம் ஓடி தீர்ந்த பிறகு அடுத்து பட்டையை கிளப்ப தயாரானது சிவாஜி கணேசனின் 'தங்கப்பதக்கம்' திரைப்படம். சிவாஜியின் திரைப்பயணத்தில் தங்கப்பதக்கத்தை பெற்று தந்தது இப்படம் என்றால் அது மிகையல்ல.