முதல் முறையாக ஏ.வி.எம் நிறுவனம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காம்போவில் வெளியான திரைப்படம் 'முரட்டு காளை'. ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுத்தில் வெளியான இப்படம் ரஜினிகாந்தின் வெற்றிப் படங்களின் பட்டியலில் முன்னிலை வகித்தது. ரஜினிகாந்த் கமர்ஷியல் ஹிட் படங்களின் லிஸ்ட் இதற்கு பிறகு தான் தொடங்கியது. ஜெய்சங்கர், ரதி அக்னிஹோத்ரி, சுமலதா,  ஒய். ஜி. மாகேந்திரன், சுருளிராஜன், தேங்காய் ஸ்ரீநிவாசன் என பெரிய திரைபட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. 42 ஆண்டுகளை கடந்த இப்படம் பற்றின சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பற்றி இந்த கட்டுரையில் காணலாம் :



* முரட்டு காளை திரைப்படத்தில் ஹீரோவுக்கு அடுத்ததாக மிகவும் ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரமான வில்லன் ரோலில் நடிக்க நடிகரை தேர்வு செய்த விதமே ஸ்வாரஸ்யமாக இருந்துள்ளது. ரஜினி வில்லன் ரோலில் நடிப்பவர் குறித்து கேட்டதற்கு ஜெய்சங்கர் போன்ற திறமையான நடிகரை போட்டுவிடலாம் என சொல்ல உடனே ரஜினி அவர் ஒரு பிரமாண்டமான நடிகர். அவரை போய் நீங்கள் வில்லனாக நடிக்க வைப்பதில் நியாயமே இல்லை என ஜெய்சங்கரை நிராகரித்துள்ளார். கடைசியில் ஜெய்சங்கர் தான் இப்படத்தின் வில்லன் என முடிவான பிறகு ஷாக்காகி விட்டாராம் ரஜினி. இருப்பினும் ரஜினி ஒரு ரெக்வஸ்ட் வைத்துள்ளார். அதாவது ஹீரோவுக்கு நிகரான முக்கியத்துவம் வில்லனான ஜெய்சங்கருக்கும் கொடுக்கப்பட வேண்டும். அதன் படியே திரைக்கதை முதல் போஸ்டர்கள் வரை இருவருக்கும் சமமான  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 


 







* தமிழ் சினிமா நடிகர்களில் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் அவர்களே நடிக்கும் சில நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர். முரட்டுக்காளை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரயில்வே ஸ்டேஷனில் சண்டை காட்சி இடம் பெற்று இருக்கும். இதற்காக ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து படமாக்கப்பட்டது. ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ இந்த காட்சிக்காக டூப் வைத்து படமாக்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு ரஜினி சம்மதிக்காமல் அவர்களும் மனிதர்களே அதனால் நானே ரிஸ்க் எடுத்து நடிக்கிறேன் என அந்த சண்டை காட்சியில் அவரே நடித்தார். ஸ்டண்ட் நடிகர்கள் மீது அக்கறை கொண்ட நடிகர் என்பதை நிரூபித்தவர் ரஜினி.


 




* முரட்டுக்காளை திரைப்படத்தில் நடிகர் ஜெய்சங்கர் முதலில் வில்லன் ரோலில் நடிக்க சற்று தயங்கினார். இருப்பினும் அதை ஏற்றுக்கொண்டு நடித்தார். ஈகோ இல்லாத ஒரு நடிகரான ஜெய்சங்கருக்கு கொடுக்கப்பட்ட பல காசோலைகள் பணம் இல்லாத காரணத்தால் திரும்பி வந்துள்ளன. அதை அப்படியே ஒரு பெட்டி நிறைய வைத்துள்ளாராம். திரும்பி கூட அந்த பணம் குறித்து தயாரிப்பாளர்களிடம் கேட்காத பெருந்தன்மை கொண்டவர். முரட்டுக்காளை திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு ஒரு நேர்காணலில் ஜெய்சங்கர் கூறுகையில் முரட்டுக்காளை திரைப்படத்தில்  வில்லன் வாய்ப்பை நான் எடுத்துக் கொண்டது மிக சரியான முடிவு. அதற்கு பிறகு தான் ஏராளமான பட வாய்ப்புகள் அமைந்து சம்பளமும் ஒழுங்காக கிடைத்தது என அவரே கூறியுள்ளார். எனவே முரட்டுக்காளை திரைப்படம் ரஜினிக்கு மட்டும் அல்ல ஜெய்சங்கருக்குமே ஒரு திருப்புமுனையாக அமைந்த படம். 


 




* ரஜினிகாந்த் நடிக்கும் ஒவ்வொரு படத்திலுமே ஒரு தனி ஸ்டைல், படத்திற்கு படம் மாறுபட்ட உடல் மொழி என ஏதாவது ஒரு ஸ்பெஷல் பஞ்ச் நிச்சயமாக இருக்கும். அப்படி ரஜினிகாந்த் முரட்டுக்காளை திரைப்படத்தில் பயன்படுத்திய 'சீவிடுவேன்' என கையை எஸ் போல அசைத்து கட்டுவது மிகவும் பிரபலமானது. அதே போல ரஜினிகாந்த் ஹேர் ஸ்டைலை ரசிக்காத ரஜினி ரசிகரே இல்லை. ஆனால் முரட்டுக்காளை திரைப்படத்துக்காக ரஜினி முதல் முறையாக விக் வைத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  



* முரட்டுக்காளை திரைப்படத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்டது நடிகர் கமல்ஹாசன் . எஸ்.பி. முத்துராமனின் முதல் சாய்ஸ் கமல்ஹாசனாக இருந்தது. ஆனால் அவரின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் ரஜினிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கடைசியில் ரஜினிகாந்திற்கு இப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்கு தாறுமாறாக கல்லா கட்டியது என்றால் அது மிகையல்ல.