"அலைகள் ஓய்வதில்லை", மணிவண்ணன் கதை எழுத, பாரதிராஜா இயக்கத்தில் ,1981 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். கார்த்திக் மற்றும் ராதா முன்னணி நடிகர்களாக அறிமுகமாகி தியாகராஜன், சில்க் ஸ்மிதா மற்றும் கமலா கமேஷ் ஆகியோர் துணை வேடங்களில் தோன்றினர். இளம் காதலர்கள் சந்திக்கும் சமூகப் பிரச்சனைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், அழகாக சொல்லும் விதத்தில் `அலைகள் ஓய்வதில்லை' ஒரு முன்னோடித் திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை.




பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஏழை தாயின் மகன் விச்சு. பள்ளி நேரம் போக, நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றி வந்து அலப்பறை செய்வது தான் அவன் வேலை. அதே ஊரில், பணக்கார டேவிட்டின் தங்கை மேரி .அண்ணனின் முழுக்கட்டுப்பா ட்டில், பயந்து நடுங்கி வளர்கிறாள்.இவர்கள் இருவருக்கும் இடையே மோதலில் தொடங்கி பிறகு காதல் மலர, இவர்களின் கதையை ஆழகாக கூறும் கதை தான் ”அலைகள் ஓய்வதில்லை”.




மீசையே முளைக்காத பருவத்தில் அறிமுகமான கார்த்திக்கின் நடிப்பும், இளமையும், வசீகரமும், ராதாவின்  கண்களிடம் இருந்தும் வெளிப்பட்ட எக்ஸ்பிரஷன்களும் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. வில்லனாக, அண்ணனாக தியாகராஜன், பலரை கவர்ந்திருப்பார். கவர்ச்சி நடிகை என்ற பட்டத்தை அகற்றி, அருமையாக நடித்த சில்க் ஸ்மிதாவின் முக்கியமான குணச்சித்திர படம் இதுவே ஆகும். ஏழை மற்றும் பரிதாப அம்மாவாக வெகு இயல்பாக கமலா காமேஷ் நடித்த முதல் முக்கியமான படம் இதுவே!




பாவலர் கிரியேஷன்ஸ் தயாரித்த ‘அலைகள் ஓய்வதில்லை’, பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், வைரமுத்து, இளையராஜா என பலரும் பாடல்கள் எழுதிக் கொடுக்க, இப்படத்தின் பாடல்கள் அன்றைக்கு செய்த தாக்கம் இன்று வரைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. முக்கியமாக பாரதிராஜாவின் இயக்கம், அவர் வைக்கிற கோணங்கள், காதலை கவிதைபோல் சொல்லுகிற அழகு என ரசனையுடன், மணிவண்ணனின் வசனங்களும் சேர்ந்து ’அலைகள் ஓய்வதில்லை’நம் நினைவில் நீங்காத ஒரு படமாக திகழ்ந்துள்ளது. படத்தில் அலைகள், பாறைகள், ஆர்மோனியப் பெட்டி, தாமரைப் பூ ஆகியவை படத்தில் ஒரு முக்கிய இடம் பிடிக்க, அவற்றை கேரக்டர்களாகவே கருதிருக்கிறார், ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் .


Also Read | கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்ட வன்முறை! பின்னணியில் யார்?...உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!


விச்சு மற்றும் மேரியை வைத்து காதலை மிக அழகாகக் கூறிவுள்ளார் இயக்குநர் பாரதிராஜா . மேரிக்காக விச்சு கறி வாங்கிவருவதும், விச்சுவுக்காக மேரி அசைவத்தை விடுவதும் … இவர்களின் ஓயாத காதலை மிக அழகாகவும் ஆழமாகவும் கூறும் படம் “அலைகள் ஓய்வதில்லை!”


“கடல் அலைகள் ஓய்வதில்லை, அதே போல் நம் காதலும் ஓயாது…”


என்று காதலுக்காக கல்ட் திரைப்படமாக கருதப்படும் ‘அலைகள் ஓய்வதில்லை’படத்திற்கு இன்று 41 வயதாகிறது.