தமிழ் சினிமா அனைத்து காலகட்டத்திலும் இரண்டு மனைவி கான்செப்ட் கதைகளை ஏராளமாக பார்த்துள்ளது. பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து கொண்டு,  திருமணம் முடிந்ததை மறைத்து வேறு பெண்ணுடன் பழகுவது என்பதெல்லாம் மிகவும் கேஷுவலான திரைக்கதை என்றாலும் அதை மிகவும் சுவாரஸ்யமாகவும் இன்றும் நினைத்து பார்க்கும் ஒரு தரமான திரைப்படமாக அமைந்தது "கோபுரங்கள் சாய்வதில்லை".


 



இன்றும் நீங்காத நினைவுகளுடன் :


இயக்குனர் பாரதிராஜாவிடம் வசனகர்த்தாவாக இருந்து ஒரு இயக்குனராக மணிவண்ணன் பணியாற்றிய முதல் திரைப்படம் "கோபுரங்கள் சாய்வதில்லை". 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாளில் வெளியான இப்படம்  இன்றோடு 40 ஆண்டுகளை கடந்துவிட்டது. காலங்களை கடந்தும் இன்றும் நம் மனங்களில் நீங்காமல் நிற்கிறது. இப்படத்தில் நடிகர் மோகன், சுஹாசினி, ராதா, வினு சக்கரவர்த்தி, எஸ்.வி. சேகர் மற்றும் பலர் நடித்திருந்தனர். குடும்பத்துடன் பார்க்க கூடிய மிக நல்ல கருத்து உள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர். ஒரு முறை அல்ல பல முறை இப்படத்தை பார்த்தவர்களும் உண்டு. அறிமுகமான முதல் படத்திலேயே ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார் மணிவண்ணன். 


 


அருக்காணியும் அவரின் ஹேர் ஸ்டைலிலும்:


இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. அந்த வெற்றிக்கு அருமையான திரைக்கதை, இசைஞானி இளையராஜாவின் இசை என பல காரணங்கள் இருந்தாலும் முதன்மையான காரணம் என்றால் அது அருக்காணி கதாபாத்திரம் தான். சில அழகான முகபாவனையால் அருக்காணியாகவே மாறினார் நடிகை சுஹாசினி. அப்படத்தில் அவரின் ஹேர் ஸ்டைல்லை யாருமே மறக்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் அந்த ஹேர் ஸ்டைல் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. இப்படம் சுஹாசினியின் திரைவாழ்வில் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. 






 


அருமையான இசை :


படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது இளையராஜாவின் பின்னணி இசை. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற  "என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்..." என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலாக மாறியது. இது மட்டுமின்றி அனைத்து பாடல்களும் அருமை. மேலும் ராதாவின் யதார்த்தமான நடிப்பு, மோகனின் கனகச்சிதமான ரியாக்‌ஷன்கள், வினு சக்கரவர்த்தியின் கலகலப்பு என அனைத்துமே படத்தை ரசிக்க வைத்து. 


சான்ஸ் வாங்கி கொடுத்த இசைஞானி:


இயக்குனர் மணிவண்ணன் இயக்குனர், கதை ஆசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவர். கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இந்த வாய்ப்பு மணிவண்ணனுக்கு கிடைக்க காரணமாக இருந்தது இசைஞானி இளையராஜா தான். இதை பல முறை மணிவண்ணனே பல இடங்களில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்கது.