தமிழ் சினிமாவில் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படங்களுக்கு என்றுமே வரவேற்பு இருக்கும் அதிலும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுவிடும். அந்த வகையில் சகோதரர்களிடையே இருக்கும் பாசப்பிணைப்பை வெளிக்காட்டி 1991ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான 'சேரன் பாண்டியன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  


 




விஜயகுமார், சரத்குமார், ஆனந்த் பாபு, சித்ரா, ஸ்ரீஜா, கவுண்டமணி, செந்தில்  உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. நடிகர் சரத்குமார் ஹீரோவாக அறிமுகமாகி பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த  முதல் படம் இது தான். அது அவருக்கு ஆடியன்ஸ் மத்தியில் மிக நல்ல பாராட்டுகளை பெற்று கொடுத்தது. வெறும் 33 நாட்களில் படத்தை எடுத்து தமிழ் திரையுலகத்தையே வாயடைக்க வைத்தவர். லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் கோடிகளை குவித்த ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். 


இப்படம் குறித்து கே.எஸ். ரவிக்குமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் 'சேரன் பாண்டியன்' படம் என்றவுடன் எனக்கு படத்தின் ரிலீஸ் அன்று சரத்குமார் தேம்பி தேம்பி அழுதது தான் ஞாபகத்தில் வரும். ஒரே நேரத்தில் சேரன் பாண்டியன் மற்றும் பவித்ரன் படத்தில் மாறி மாறி இரவும் பகலுமாக நடித்து வந்தார். சேரன் படத்திற்காக மொத்தமாக ஒரு 5  முதல் 6 நாட்கள் வரை தான் கலந்து கொண்டார். ஆனால் படம் வெளியானதும் அவர் இத்தனை காட்சிகளில் நான் நடித்தேனா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. என்னை ஹீரோவாக ஆக்கிட்டீங்க என சொல்லி கண்கலங்கினார் சரத்குமார் என பேசி இருந்தார் கே.எஸ். ரவிக்குமார். 


சேரன் பாண்டியன் படத்தில் சரத்குமார், விஜயகுமாரின் தங்கையாக நடித்தவர் நடிகை சித்ரா. இவர் இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என்றே அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சித்ரா தமிழ், மலையாளம் என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரின் திரைப்பயணத்தில் 'சேரன் பாண்டியன்' படம் மிக முக்கியமான படமாக அமைந்தது. சினிமாவில் வாய்ப்புகள் குறைய சின்னத்திரை பக்கம் சென்றவர் பின்னர் குடும்பத்தை கவனித்து கொள்வதற்காக நடிப்பில் இருந்து விலகினார். 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  



மற்றொரு நடிகையாக சேரன் பாண்டியன் படத்தில் நடித்தவர் மலையாள  நடிகை ஸ்ரீஜா. மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்த ஸ்ரீஜா, மம்மூட்டி, அமலா நடிப்பில் வெளியான 'மௌனம் சம்மதம்' படத்தில் சரத்குமார் மனைவியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சேரன் பாண்டியன் படத்தில் விஜயகுமார் மகளாக, ஆனந்த் பாபு ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ச்சியாக நடித்து வந்த ஸ்ரீஜா 1993ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு என் ராஜாங்கம் என்ற படத்தில் நடித்ததற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார். குறுகிய காலத்திலேயே கவனம் ஈர்த்த நடிகையாக வளர்ந்து அதே ஸ்பீடில் சினிமாவில் இருந்தும் விலகினார்.