தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் திரைத்துறையில் 31 ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


1971 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி  ஹைதராபாத்தில் பிறந்த அஜித் சென்னை மற்றும் ஆந்திராவில் பள்ளிப் படிப்பை முடித்தார். உயர்கல்வி படிக்காத நிலையில் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை, பைக் மெக்கானிக், டெக்ஸ்டைல் பிசினஸ் என பலவிதமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். ஆனால் மாடலிங் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்த அஜித்துக்கு சினிமாவில் பயணம் செய்யும் வாய்ப்பு அமைந்தது. 


1990 ஆம் ஆண்டு  சுரேஷ் - நதியா நடித்த 'என் வீடு என் கணவர்' படத்தில் ஒரு பள்ளி மாணவராக அஜித் நடித்திருந்தார். ஆனால் 1993 ஆம் ஆண்டு அஜித் ஹீரோவானார். அது தமிழில் இல்லை தெலுங்கில் வெளியான ‘பிரேம புஸ்தகம்’ படத்தில் தான். இதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் தமிழில் ‘அமராவதி’ படத்தில் ஹீரோவாக எண்ட்ரீ கொடுத்தார். பின்னாளில் அஜித் தமிழ் சினிமாவில் தான் முன்னணி நடிகராக இருப்போம் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். 


ஆனால் ரசிகர்கள் அவரை முதலில் ஏற்றுக் கொண்டனர். பின்னர் கைகளில் வைத்தும், தோளில் ஏந்தியும், பின்னாளில் தலையில் வைத்து கொண்டாடவும் செய்தனர். அஜித் ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்றழைக்கப்படுகிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அவருக்கு ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, சிட்டிசன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூவெல்லாம் உன் வாசம்,தீனா, முகவரி,வில்லன், அட்டகாசம்,பில்லா,  மங்காத்தா, வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க காரணமாக அமைந்தது. 


நடிப்பு தவிர்த்து பைக் பயணத்தில் ஆர்வம் கொண்ட அஜித், ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகும் எதாவது ஒரு நாட்டுக்கு பைக் பயணம் மேற்கொள்ள சென்று விடுவார். சாதாரண மனிதரின் வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என ஆசைப்படுவதாக முன்னதாக அளித்த நேர்காணல்களில் தெரிவித்திருப்பார். இப்படியான நிலையில் அஜித் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி 31வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டு சிறப்பித்துள்ளனர். இதில் மங்காத்தா, பில்லா, துணிவு உள்ளிட்ட படங்களின் கேரக்டர்கள் இடம் பெற்றுள்ளது.