உலக நாயகன் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்து அசத்தியிருந்த படம்தான் 'மைக்கேல் மதன காமராஜன்’. 1990 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். படத்திற்கு திரைக்கதையை கமல்ஹாசன் எழுதியிருந்தார். வசனங்களை மறைந்த கிரேஸி மோகன் எழுதியிருந்தார். நகைச்சுவை படமாக உருவான மைக்கேல் மதன காமராஜன் இன்றும் பலருக்கு ஃபேவரேட். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு  முன்னர் பிரேமம் திரைப்பட இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் முகநூல் வாயிலாக கமல்ஹாசனிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். ”மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு பட்டப்படிப்பு போன்றது அதனை எப்படி செய்தீர்கள்” என கேட்டிருந்தார’ அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “ பல வருடங்கள் கழித்து அந்த படம் குறித்து பேசுவது எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு மாஸ்டர் பீஸ், விரைவில் அது குறித்து விளக்குகிறேன் நன்றி அல்போன்ஸ் புத்திரன்” என தெரிவித்திருந்தார். 



இந்நிலையில் “அல்போஸ்ன்ஸ் புத்திரன் மற்றும் அனைத்து புத்திரன்களின் வேண்டுகோளுக்கும் இணங்க” என பதிலளிக்க தொடங்கிய கமல்ஹாசன் “ மைக்கேல் மதன காமராஜன் ஒரு மாஸ்டர் பீஸ் என நான் கூற காரணம் , நான் மாஸ்டர் என்பதற்காக அல்ல , எப்போதுமே படங்கள் குறித்த  நுணுக்கங்களை நான் கற்பிக்காததற்கு காரணம், ஆசிரியராக இருக்க நல்ல தகுதி வேண்டும். நான் இன்னும் ஆர்வம் குறையாத மாணவனாகவே இருக்கிறேன். ஆசிரியரை விட ஒரு மாணவனுக்கு கற்பதில் அதிக பசி இருக்கிறது. எனவேதான் எனக்கு நிறைய ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் . இயக்குநர்கள் அனந்து, சிங்கீதம் மற்றும் கே.பாலசந்தர் ஆகியோரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டதற்கு எனக்கு இருந்த இந்தப் பசியே காரணம், இவர்கள் கலையை கற்றுக்கொண்டுப்பதில் முன்னோடி. நான் அவர்களிடம் கற்ற அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள முயற்சிக்கிறேன். 30 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் செய்ததை பகிர்வதன் மூலம் எங்களை விட சிறந்த படைப்புகளை வருங்கால இயக்குநர்கள் கொடுக்க முடியும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 


 



மேலும் “ ஒரு கோமாளியிடம் கேளுங்கள் சிரிக்க வைப்பது எவ்வளவு கடினம் என்று ,நகைச்சுவை படங்களை நீங்கள் எளிமையாக வணிகமாக்கிவிடலாம். ஆனால் அதற்காக வலிகளை ஏற்று  கண்ணீர் சிந்தவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும், சிரிக்க வைப்பதை விட சிரமம் வேறில்லை , வித்தைகள் காட்டுவதை விட அதை வித்தியாசமாக காட்ட வேண்டும் “ என உதாரணம் ஒன்றையும் கொடுத்திருந்தார் கமல்.






பலராலும் பாராட்டப்பட்ட பாலக்காடு காமேஷ்வரன் கதாபாத்திரத்தில் பேசிய மலையாள மொழியை தனது நண்பர்கள் மற்றும் மலையாள திரைப்பட அனுபவங்கள் மூலம் கற்றதாகவும், தனது  முதல் மனைவி ஒரு பாலக்காடு பிராமண பெண் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்றளவும் புகழ்பெற்ற மைக்கேல் மதன காமராஜன் க்ளைமேக்ஸ் காட்சிக்காக தான்  அப்போது வரைந்த சாம்பிள் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இது தவிற மற்ற கதாபாத்திரங்களின் பங்களிப்பு மற்றும் அவை உருவான விதம் குறித்தும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன்.