உலக நாயகன் கமல் நடித்த பல படங்கள் இன்றும் பேசப்படுகிறது. அப்படி ஒரு படைப்பு தான் தேவர் மகன். இப்படத்திற்கான கதை, திரைக்கதை எழுதியவர் கமல். இயக்கியவர் பரதன். ராஜ்கமன் இண்டர்நேஷனல் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இசை இளையராஜா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல், கவுதமி, ரேவதி, வடிவேலு, நாசர் ஆகியோர் நடித்த இத்திரைப்படம், 1992 அக்டோபர் 25 இதே நாளில் வெளியானது. இன்றோடு சரியாக 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது தேவர் மகன் திரைப்படம். 


தென்மாவட்டத்தில் நடக்கும் ஒரு சமூகத்தின் பங்காளி சண்டையை மையமாக வைத்து  எடுக்கப்பட்ட தேவர் மகன் திரைப்படம், வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றியை பெற்ற திரைப்படம். அதுமட்டுமின்றி, 1992 ம் ஆண்டிற்கான இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில், பல பிரிவுகளில் 5 விருதுகளை பெற்றது. அதுமட்டுமின்றி, ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






வெறும் 7 நாட்களில் இப்படத்திற்கான திரைக்கதையை கமல் எழுதி முடித்திருந்தார் என்பது, அதை விட பிரமிப்பான விசயம். ஜாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும், அதன் முடிவு ‛புள்ள குட்டியை படிக்க வைங்கடா..’ என ஜாதிய வெறிக்கு எதிரான கருத்துக்களை ஆழமாக சொன்ன திரைப்படம். ஒரு சமூகத்தின் வாழ்வியலை, அவர்களின் அன்பை, காதலை, கோபத்தை, வன்மத்தை அழகாக படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். 


வித்தியாசமான காட்சிக் களம், வித்தியாசமான மனிதர்கள், வினோதமான டயலாக் என புதுவிதமான சினிமாவை காட்டியதில், தேவர் மகன் இன்றும் மக்கள் மனதில் நிற்கிறது. குறிப்பாக, இளையராஜாவின் இசையின் அனைத்து பாடல்களும் இன்றும் ரசிக்கும் ரகம். பெரிய தேவராக வரும் சிவாஜியின் நடிப்பு, அவரின் துடிப்பு அனைத்துமே பார்க்கவே பிரமிப்பாகவே இருக்கும். பங்காளி சண்டையும், பகையோடு நடக்கும் சண்டையும் துரத்தி துரத்திச் செல்லும் திரைக்கதையும் தேவர் மகனின் பெரிய பலம்.


இன்று பல படங்களில் இரண்டாம் பாகங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தேவர் மகன் படத்திற்கான இரண்டாம் பாகத்தை தான் கமல் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பல இளம் இயக்குனர்களும், தேவர் மகன் 2 ம் பாகத்தை இயக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கின்றனர். அந்த அளவிற்கு தேவர் மகன், தமிழ் சினிமாவில் சிலாகிக்கப்பட்டவர். அதன் பின் சண்டியர் என்ற படம் எடுக்க கமல் முயற்சித்த போது, தேவர் மகன் படத்தை காரணம் காட்டி, அதை எதிர்த்த நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. 


அந்த வகையில் தேவர் மகன், ஒரு தயாரிப்பாளராக கமலுக்கு பெரிய லாபம் தந்த திரைப்படம். சிவாஜி-கமல் என இரு ஜாம்பவான்களின் நடிப்புக்கு தீனி போட்ட படம். வடிவேலு என்கிற மகா கலைஞனுக்கு பெரிய ஸ்கோப் தந்த படம். இன்று அந்த திரைப்படத்தின் 30 ம் ஆண்டு நிறைவு பெறுவதை எப்படி கொண்டாடாமல் இருக்க முடியும். 30 ஆண்டுகளுக்கு முன் தீபாவளி திருநாளில் வெளியான தேவர் மகன் நடத்திய வசூல் வேட்டை, வேறு எந்த படமும் அந்த அளவிற்கு பரபரப்பாக பேசப்படவில்லை என்பது தான் உண்மை.