சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு, கே.எஸ். ரவிக்குமாரின் இயக்கம் என முழுக்க முழுக்க கிராமத்து மண் வாசனை மாறாத ஒரு அதிரிபுதிரி ஹிட் அடித்த திரைப்படம் தான் 1994ம் ஆண்டு வெளியான 'நாட்டாமை' திரைப்படம். இந்த எவர்கிரீன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ஏலே சம்முவம்... எட்றா வண்டிய... என மார்பு முழுக்க சந்தனம், காதில் காதில் கடுக்கன், சிண்டு முடி குடுமி என மிடுக்காக வந்து அதகளம் செய்து இருப்பார் நடிகர் விஜயகுமார். இரட்டை கதாபாத்திரத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சரத்குமார் அவருக்கு ஜோடியாக குஷ்பூவும், மீனாவும் அசத்தியிருந்தனர். சரத்குமார் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. நாட்டாமை படத்திற்கு பிறகு அவரின் மார்க்கெட் பல மடங்கு எகிறியது என்பது வேறு கதை.
நீதி, நேர்மை, நியாயமே உயிர் மூச்சாக கொண்டு இருந்த நாட்டாமை குடும்பத்தாரை வைத்து ஒரு பக்கம் கதைகளம் சீரியஸாக நகர கவுண்டமணி, செந்தில் தனியாக ஒரு காமெடி ட்ராக்கில் தனி ராஜாங்கமே செய்து கைதட்டல்களை அள்ளினார்கள். அவர்களின் ‘மிக்சர் காமெடி’ இன்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
வில்லனாக பொன்னம்பலம் ரசிகர்களின் வெறுப்பு மொத்தத்தையும் சம்பாதித்து இருந்தார். அவரின் வாழ்நாளில் அமைந்த ஒரு சிறந்த கதாபாத்திரமாக 'நாட்டாமை' படம் அமைந்தது. இன்று வரை அவரின் அடையாளமாகவும் விளங்குகிறது. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நெகிழ வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் ஆச்சி மனோரமா. மேலும் வினுசக்கரவர்த்தி, சங்கவி, ராஜா ரவீந்தர், ராணி, வைஷ்ணவி, ஈரோடு சௌந்தர் என அனைவருமே அவரவர்களின் பங்களிப்பை முழுமையாக கொடுத்து இருந்தனர்.
சிற்பியின் இசையில் நாட்டாமை பாதம் பட்டா, நான் உறவுக்காரன் உறவுக்காரன், கோழிக்கறி குழம்பு என அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்றாலும் இன்று வரை பலரும் முணுமுணுக்கும் ஒரு பாடலாக அமைந்துள்ளது 'கொட்ட பாக்கும்... கொழுந்து வெத்தலையும் பாடல்'. பெண் பார்க்கும் படலம் என்றாலே நினைவுக்கு வரும் பாடலாக இப்பாடல் இன்று வரை சிலாகிக்கப்படுகிறது. 'மீனா பொண்ணு மீனா பொண்ணு...' பாடல் மீனாவின் அடையாளமாகவே இன்று வரை கொண்டாடப்படுகிறது.
குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் என்றாலும் 150 நாட்களையும் கடந்து ஓடி சாதனை படைத்து வசூலையும் வாரி குவித்தது. நாட்டாமை படம் வெளியான சமயத்தில் எந்த அளவுக்கு ஈர்த்ததோ அது கடுகளவும் குறையாமல் 29 ஆண்டுகளை கடந்த பின்பும் இன்று வரை அதே புத்துணர்ச்சியை கொடுப்பது தான் 'நாட்டாமை' படத்தின் ஹைலைட்.