ஹாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியாகி உலகெங்கிலும் மாபெரும் வெற்றியை பெற்ற ஒரு திரைப்படம் 'டைட்டானிக்'. இப்படத்தின் 25 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்ற தகவல் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் அமோகமான வரவேற்பை பெற்று வசூலிலும் அசைக்க முடியாத சாதனையை பெற்றது. மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை என 11 ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று கதை :
1912ம் ஆண்டு பிரமாண்டமான டைட்டானிக் கப்பல் ஆயிரம் கணக்கான பயணிகளோடு பயணம் செய்த போது அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. ஏராளமானோர் உயிரிழந்த அந்த சோக வரலாற்றை மையமாக வைத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதிர வைக்கும் வசூலால் திணறடித்த இப்படம் 2012ம் ஆண்டு 100ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. இப்படத்தில் காட்சிகள் அனைத்தும் கைக்கெட்டும் தூரத்தில் நிகழ்வது போலவே இருந்ததை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
'ரீ மாஸ்டர்டு' பதிப்பு :
அந்த வகையில் டைட்டானிக் திரைப்படம் 25ம் அண்டை கடக்க உள்ள நிலையில் அதன் 'ரீ மாஸ்டர்டு' பதிப்பு ' 3D 4K HDR' தொழிநுட்பத்தில் 2023-ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வார இறுதி நாளான பிப்ரவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த தகவல் திரை ரசிகர்களை அளவில்லா சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ளது. இன்றைய தலைமுறையினர் இப்படத்தை கொண்டாடி தீர்க்க ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.