தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விஜய் - சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. இந்த எவர்கிரீன் கிளாசிக் ஹிட் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் இன்று வரை ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் குறித்து பலரும் அறியாத சில ஸ்வாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். 


 




நடிகர் விஜய் திரைப் பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம் மற்றும் அவரை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கொண்டு சேர்த்த ஒரு திரைப்படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. 'காதலுக்கு மரியாதை' படத்தின் ஹிட்டுக்கு பிறகு ஒரே ஆண்டில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த ஒரு படம். தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவிலும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்த படம். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் இன்று வரை இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஃபேவரட் பாடல்களாக இருந்து வருகின்றன. 


'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் இயக்குநர் எழில் 1931ம் ஆண்டு சார்லி சாப்ளின் நடிப்பில் வெளியான 'சிட்டி லைட்ஸ்' என்ற படத்தை மையமாக வைத்து தமிழில் ஒரு காமெடி ட்ராக்கில் படத்தை எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டு நடிகர் வடிவேலுவை அணுகியுள்ளார். அவருக்கு படத்தின் கதை பிடித்து இருந்தாலும் அந்த காலகட்டத்தில் எந்த ஒரு தயாரிப்பாளரும்   வடிவேலுவை ஹீரோவாக வைத்து படம் எடுக்க முன்வராமல் தயக்கம் காட்டியுள்ளனர். அதனால் அந்த கதை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 



ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கதையை வேறு ஒரு தயரிப்பாளரிடம் சென்று இயக்குநர் எழில் சொல்ல அவரோ நெகடிவ் எண்டிங் என சொல்லி நிராகரித்துள்ளார். கடைசியாக ஆர்.பி. சௌத்ரியிடம் கதை சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்த போது அவர் இந்த கதைக்கு பாசிட்டிவ் எண்டிங் கொடுக்க முடியுமா என கேட்டு கடைசியில் பாசிட்டிவான ஒரு கிளைமாக்ஸுடன் உயிர் பெற்றது 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படம். 


 


 



இப்படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் தேர்ந்து எடுக்கப்பட்டவர் நடிகர் முரளி. ஆனால் அந்த சமயத்தில் முரளி மிகவும் பிஸியாக இருந்ததால் அவரின் கால்சீட் கிடைக்கவில்லை. அடுத்து இந்த கதையை விஜய்யிடம் சொல்ல அவருக்கு மிகவும் பிடித்ததால் உடனடியாக ஷூட்டிங் ஏற்பாடுகள் துவங்கியது. 



அதே போல முதலில் ஹீரோயினாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் நடிகை ரம்பா. அவரும் அந்த சமயத்தில் சில தெலுங்கு, தமிழ் படங்களில் பிஸியாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. அடுத்ததாக நடிகை சிம்ரன் தேர்ந்து எடுக்கப்பட்டார். 


இப்படத்திற்கு இயக்குநர் எழில் முதலில் தேர்ந்தெடுத்த டைட்டில் 'ருக்மணிக்காக'. ஆர்.பி. சௌத்ரியின் ஆலோசனையின் படி இப்படத்திற்கு பழைய படத்தின் ஹிட் பாடல் ஒன்றின் வரியை எடுத்து 'துள்ளாத மனமும் துள்ளும்' என்பது டைட்டிலாக வைக்கப்பட்டது. 


 



முதலில் இப்படத்தின் ஷூட்டிங் திருவல்லிக்கேணியில் நடத்த முடிவு செய்தனர். ஆனால் நெருக்கடியான அந்த ஏரியாவில் ஷூட்டிங் நடத்துவது சிரமம் என்ற கேள்வி வந்தது. அந்த சமயத்தில் தான் வடபழனி அருகே இருந்த ஸ்டூடியோவில் மலையாள திரைப்படம் ஒன்றுக்காக போடப்பட்ட செட் ஒன்று இருந்தது. அந்த செட்டை திருவெல்லிக்கேணியில் இருப்பது போன்ற நெருக்கடியான செட்டாக மாற்றலாம் என சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். முழு படத்தின் படப்பிடிப்பு அதே செட்டில் தான் நடைபெற்றது. 


இந்த படம் முழுக்க மெட்ராஸ் பாஷை பேசி கொண்டு சுற்றி திரியும் ஒரு கதாபாத்திரமாக நடித்தவர் நடிகர் பாரி வெங்கட். கவனத்தை ஈர்க்கும் வகையில் நடித்த இந்த நடிகர் படம் வெளியான ஓரிரு ஆண்டுகளிலேயே ஒரு விபத்தில் உயிரிழந்தார் என்பது ஒரு சோகமான விஷயம். 


தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் இந்த பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.