தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படம் 25 ஆண்டுகளை இன்றுடன் நிறைவு செய்கிறது. 


நடிகர் திலகம் - சூப்பர் ஸ்டார்


தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குனர் என பெயர் எடுத்த கே எஸ் ரவிக்குமார் முத்து படத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக ரஜினியுடன் படையப்பா படத்தில் இணைந்தார். இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, சித்தாரா, செந்தில், நாசர், அப்பாஸ், ப்ரீதா விஜயகுமார் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படையப்பா படத்தை நடிகர் ரஜினிகாந்த் சொந்தமாக தயாரித்திருந்தார். இப்படம் வெளியான காலகட்டத்தில் ரூபாய் 50 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.






கதை ரீவைண்ட்


ரஜினியின் தந்தையாக வரும் சிவாஜி கணேசன் தனது வளர்ப்பு சகோதரனான மணிவண்ணனிடம் அனைத்து சொத்துக்களையும் இழந்து விட்டு இறந்து விடுகிறார். ரஜினியின் தங்கை சித்தாராவை தன் வீட்டில் மருமகளாக ஏற்பதாக கூறிவிட்டு அவர்கள் பொருளாதார வசதியின்றி இருக்கும் நிலையில் ஏமாற்றி விடுவார் ராதாரவி. அவரின் மகளான ரம்யா கிருஷ்ணனுக்கு ரஜினி மீது காதல் இருக்கும். ஆனால் ரஜினியோ சௌந்தர்யாவை காதலித்து திருமணம் செய்கிறார். இந்த ஏமாற்றத்தில் ராதாரவி தற்கொலை செய்து கொள்வார். இதனால் கோபம் கொள்ளும் ரம்யா கிருஷ்ணன் ரஜினியையும், சௌந்தர்யாவை பழிவாங்க திட்டமிடுகிவார். இது வெற்றி பெற்றதா என்பது மீதி கதை. 






ஒரு பக்கம் பேமிலி ஆடியன்ஸ், இன்னொரு பக்கம் பக்கா ஆக்‌ஷன் விருந்து என கே.எஸ்.ரவிகுமார் தூள் கிளப்பியிருப்பார். வழக்கம்போல ஒரு பாட்டுக்கும் ஆடி அப்ளாஸ் வாங்கியிருப்பார். 


மிரண்டு போன கோலிவுட்


படையப்பா படத்தில் ரஜினிக்கு எதிரான வில்லன் கேரக்டரில் ஒரு பெண் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பை கோலிவுட்டை மிரள வைத்தது. இதில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த நீலாம்பரி என்ற கதாபாத்திரம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதியதாக இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். மேலும் படம் முழுக்க ரஜினியின் ஸ்டைல், பஞ்ச் டயலாக், தத்துவ பாடல் என இன்னும் பல ஆண்டுகள் கழிந்தாலும் பார்ப்பதற்கு அப்படியே பிரஷ்ஷாக இருக்கும் படையப்பா படம். 


வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதிய நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஒட்டுமொத்த ஆல்பத்தையும் ஹிட் ஆக்கியது. மேலும் இப்படம் எடுத்து முடித்து பார்த்தபோது கிட்டதட்ட 5 மணி நேரம் காட்சிகள் இருந்ததாம். இதனால் உலகநாயகன் கமலிடம் 2 இடைவேளை விடலாமா என்றெல்லாம் அட்வைஸ் கேட்டுள்ளார் ரஜினி. ஆனால் அப்போதைய சூழலுக்கு செட்டாகாது என கமல் சொன்னதால் 3 மணி நேரமாக படம் குறைக்கப்பட்டது. 


சிவாஜிகணேசன் இந்த படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார். ரஜினியுடன் 5வது முறையாக நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானிடன் உதவியாளராக ஹாரிஸ் ஜெயராஜ் பணியாற்றிருப்பார். இதில் இடம்பெற்ற அந்த ஊஞ்சல் காட்சிக்கு ஹாரிஸ் தான் மியூசிக் பண்ணியிருந்தார். 


பஞ்ச் டயலாக்குகள் நிறைந்த படம்


”என் வழி தனி வழி.. சீண்டாத தாங்க மாட்ட”, “அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது”, ”தெரியாம செஞ்ச தப்புக்கு தான் மன்னிப்பு.. தெரிஞ்சே செஞ்சதுக்கு கிடையாது”, ”என் ஜென்ம விரோதிய கூட மன்னிச்சுடுவேன்.. ஆனால் கூடவே இருந்து குழி பறிக்குற துரோகிய மன்னிக்கவே மாட்டேன்”, ”கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.. கஷ்டப்படாம கிடைச்ச எதுவும் நிலைக்காது”, ”போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” என படம் முழுக்க வசனங்கள் அனல் பறக்கும்.


படத்தின் ஒரு காட்சியில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியிடம், “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகவே இல்ல” என சொல்வார். அதற்கு ரஜினி “கூடவே பொறந்தது எப்பவும் போகாது” என பதில் சொல்வார். அந்த வகையில் படையப்பா படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக என்றும் இருக்கும்.