தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு நாளை மறுநாள் பிரதமர் மோடி செல்லவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 


The Elephant Whisperers படம் 


நீலகிரி மாவட்டம் முதுமலை சரகத்தில் ஆசியாவில் மிகப்பழமையான தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த மார்ச் 12 ஆம் தேதி நடந்தது. 


இதில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட The Elephant Whisperers படம் பெற்றது. இந்த படம் முன்னதாக கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருந்தது.பெண் இயக்குநரான கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. மேலும் இப்படத்தில் யானைகளை பராமரித்து வரும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி  குறித்து காட்சிகள் இடம் பெற்றது. 


குவியும் சுற்றுலாப் பயணிகள் 


ஆஸ்கர் விருது வென்றதும் உலகம் முழுவதும் முதுமலை தெப்பக்காடு பிரபலமாகியது. குறிப்பாக பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியை காணவும், The Elephant Whisperers படத்தில் இடம் பெற்ற யானை ரகுவை காணவும் கூட்டம் அலை மோதுகிறது. இப்படியான நிலையில் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி நாளை மறுதினம் (ஏப்ரல் 9) வருகை தருகிறார். 


தெப்பக்காட்டில் பிரதமர் மோடி 


மைசூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் மசினகுடி நகரத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து சாலை வழியாக தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மசினகுடி முதல் தெப்பக்காடு வரை சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தெப்பக்காடு முகாமில் யானைகள் பராமரிக்கும் முறைகள், அதற்கு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிவதோடு, பின் பாகன்களிடம் கலந்துரையாட உள்ளார்.  தொடர்ந்து ஆஸ்கர் தம்பதியினர் பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினரை சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார். இதனையடுத்து ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி யானைகளை பார்வையிடுகிறார். 


பின்னர் மசினகுடி சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மைசூர் செல்ல உள்ளார். இந்நிலையில் பொம்மன் - பெள்ளி தம்பதியினரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதால் அவர்களுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தம்பதியினரை சந்திக்க வரும் சுற்றுலாப் பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.