2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். கே.எஸ் ரவிகுமார் இயக்கி, க்ரேஸி மோகன் வசனங்கள்  எழுதி கமல்ஹாசன் திரைக்கதை எழுதி உருவான திரைப்படம் பஞ்சதந்திரம். கமல்ஹாசன் , ஜெயராம் , யூகி சேது , ஸ்ரீமன் இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.


ஐந்து ஆண்கள் திருமணத்திற்கு பின்பான தங்களது வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்கிற ஒற்றை வரியை கதைக்களமாக எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட படம் பஞ்சதந்திரம்.  இந்த ஐந்து  நபர்களும் தங்களது வீட்டிற்குத் தெரியாமல் போகும் ஒரு பயணத்தில் நடக்கும் சம்பவங்களை மிகவும்  காமிக்கலான நகைச்சுவைகளால் நிரப்பியிருப்பார்கள். கே எஸ் ரவிகுமார் மற்றும் கமல் ஆகிய இருவரும்  மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்தார்கள். அதே சமயத்தில் ரவிகுமாரில் மேலாளரான பி.எல். தேனப்பன் அவர்கள் தயாரிப்பில் உருவான முதல்  படம் பஞ்சதந்திரம்.


சலிக்காத நகைச்சுவை


பெருமாலான நகைச்சுவைத் திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட  காலத்திற்கு பிறகு  சலிப்படைந்து விடுகின்றன. அப்படியான ஒரு சூழலில் இன்று வரை எத்தனை முறை பார்த்திருந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைக்கக்கூடிய ஒரு படமாக இருக்கிறது பஞ்சதந்திரம்.இதற்கு முக்கிய காரணம் அந்தப் படம் கையாண்ட ஒரு குறிப்பிட்ட நகைச்சுவை பாணியே. அது என்ன தெரியுமா?


பன் என்கிற நகைச்சுவை


பஞ்சதந்திரம் திரைப்படத்தின் காமெடி ஆங்கிலத்தில் பன் (pun) என்று சொல்லப்படும் ஒரு வகையான நகைச்சுவைத் தன்மையை கையாண்டது. க்ரேஸி மோகனின் அனைத்து வசனங்களுமே பன் வகைமையைச் சார்ந்தவை. பன் என்பது ஓசையில் ஒரு அர்த்தமும் பொருளாக வேறு அர்த்தமும் கொண்ட சொற்களை இடம்மாற்றி பயன்படுத்தும்போது ஏற்படும்  குழப்பங்களால் உருவாகும் நகைச்சுவை. உதாரணத்திற்கு  படத்தில் வரும் முன்னாடி பின்னாடி என்ன இருந்தது என்று காரை நிறுத்தி போலீகாரர் கேட்கும் காட்சியில் ஏற்படும் குழப்பமான காட்சி. தமிழில் சொன்னால் எடக்கு மடக்கான  காமெடி என்று இதை சொல்லலாம். அந்த காட்சியின் இறுதி வரை அதாவது அவர்களின் கார் அந்த இடத்தைவிட்டு நகரும் வரை கதாபாத்திரங்கள் பேசுவது அனைத்துமே எடக்கு மடக்குதான்.


 நாகேஷ், கமல், க்ரேஸி மோகன்


தமிழ் திரைப்படங்களில் இத்தகைய நகைச்சுவைகளை அறிமுகப்படுத்தியவர்கள் கமல் மற்று க்ரேஸி மோகனதான். இதற்கு முன்பாக அவ்வப்போது நாகேஷிடம் நாம் இந்த வகையான காமெடிகளைப் பார்த்திருக்கிறோம். பஞ்சதந்திரம்  படத்தில் நாகேஷ் நடித்திருந்தது தற்செயல் அல்ல .  


பஞ்சதந்திரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தாராம் கமல்ஹாசன். திருமணமான ஐந்து பெண்கள் அதே மாதிரி ஒரு பயணத்திற்கு செல்லும் கதையாம். ஆனால் கமல் பிஸியாக இருந்த காரணத்தினால் அந்தப் படம் கைவிடப்பட்டது