’பத்து பேர அடிச்சி டான் ஆனவன் இல்ல.நான் அடிச்ச பத்து பேருமே டான் தான்’ கே.ஜி.எஃப் படத்தின் வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ இயக்குநர் வசந்தின் படங்களுக்குப் பொருந்தும். இயக்குநர் பாலச்சந்தரின் பட்டறையிலிருந்து வந்தவர். இவர் இயக்கிய படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றாலும் அவை ஒவ்வொன்றும் தனித்துவ ரகம்.  அந்த வகையில் அவரது ’ரிதம்’, சென்னையின் ட்ராஃபிக் பேரிரைச்சலுக்கு நடுவே போகன்வில்லா நிரம்பிய அதிகாலை பெசண்ட் நகர் சாலையைப் போலத் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் மசாலா காதல் படங்களிடையே ஒரு மெச்சூர்ட் காதல் திரைப்படம். 




தமிழ்சினிமாவின் ஆக்‌ஷன் கிங்காக அறியப்பட்ட அர்ஜூனை மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் போட்டோகிராஃபராகப் பணியாற்றும் கார்த்திகேயன் என்னும் சாஃப்ட் ரொமான்ஸ் கேரக்டராகக் காட்சிப்படுத்தியதற்கே வசந்துக்கு ஒரு அப்ளாஸ் தரலாம். அதே மும்பையில் ஒரு வங்கியின் காசாளர் சித்ராவாக மீனா.




ப்ளாஷ்பேக்கில் ஒரே விபத்தில் தனது மனைவி மற்றும் கணவனை இழக்கும் இவர்கள் இருவருரையும் காலம் என்னும் கயாஸ் தியரி எப்படி மும்பையில் மீண்டும் மீண்டும் சந்திக்க வைக்கிறது?.  ’காதல்ங்கறது ஒருத்தரிடம் ஒருமுறைதான் பூக்கும்’ என்கிற பழைய பித்தளை லாஜிக்கை எல்லாம் உடைத்து எப்படி இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பையும் மீண்டும் ஒரு காதலையும் வளர்க்கிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.






ஒன்லைன் இதுதான் என்றாலும் இதை மையமாக வைத்துப் படம் முழுக்க வரும் குட்டிக் குட்டிக் கதைகள்தான் அதன் பலம்.  ப்ளாஷ்பேக்கில் அர்ஜூன் மனைவியாக ஜோதிகா, மீனாவின் கனவராக ரமேஷ் அர்விந்த்.. இந்த இரண்டு ஜோடிகளுக்குமிடையிலான அழகான ரொமான்ஸ் இதற்கிடையே அர்ஜூனின் அப்பா அம்மாவாக நடிக்கும் நாகேஷ் மற்றும் வத்சலா ராஜகோபால், இவர்களிடையிலான வயோதிகக் காதல் என மூன்று அழகிய லவ் ஸ்டோரிகள். 




வங்கியில் மீனா படிக்கும் மாலனின் புத்தகத்தைப் பார்த்து அவரிடம் தமிழில் பேசுவது. மீனாவின் மகனுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து ஃபிரெண்டாவது மருத்துவமனையில் நாகேஷுக்கும் வத்சலா ராஜகோபாலனுக்கும் இடையிலான உரையாடல். அர்ஜூனுக்கும் அஜய் ரத்னம் கதாப்பாத்திரத்துக்கும் இடையிலான நட்பு, அருணா கதாப்பாத்திரமாக ஜோதிகா... அர்ஜூன் போனில் எதிர்முனையில் ‘ரா-ஜி-னா-மா’ எனச் சொல்லவும் இந்தப் பக்கம் முட்டைக்கண்கள் அழகாக விரிய எமோஷனலாவது.




பேஸ்கட்பால் காட்சி முதல் அர்ஜூனுக்கு ஹேர்கட் செய்துவிடும் காட்சிகள் வரை என ஒவ்வொரு காட்சியிலும் அருணா என்னும் கதாபாத்திரமாகவே பொருந்தியிருப்பது என ஜோதிகா ’ரிதம்’ படத்தின் கச்சிதமாகப் பொருந்திப்போன ட்யூன். 




மற்றொரு பக்கம் மீனாவுக்கும் ரமேஷ் அர்விந்துக்கும் இடையிலான காதல். சராசரி சினிமாக்கள் போல துரத்தித் துரத்தி லவ் பண்ணும் ஹீரோவாக ரமேஷ் அர்விந்தை காட்சிபடுத்தியிருந்தாலும் குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் என மீனாவிடம் கோரிக்கை வைக்கும் ஒருகாட்சியில் மொத்த ஆடியன்ஸ் மனதையும் அந்தக் கதாப்பாத்திரம் கொள்ளையடித்திருக்கும்.   


படத்தின் பெரியபலம் பாடல் வரிகளும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும். பஞ்சபூதங்கள் தீமில் படத்தின் பாடல்களை உருவாக்கியது அதுவரை தமிழ்சினிமாவில் வேறு யாரும் யோசித்திருக்காத கான்செப்ட். 


’ஐயோ பத்திக்கிச்சு..’ ரம்யாகிருஷ்ணன் நடனத்துக்கு என்றே உருவாக்கப்பட்ட பாடல்
‘அன்பே இது நிஜம்தானா’ பாடாலை மீனாவின் நெளிந்து ஆடும் நடனத்துக்காகவே பார்த்த ரசிகர்கள் உண்டு.
 
‘நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே’ , 


‘அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் 
வானவில்லை ரசித்திருந்தேன். 
அந்த நேரத்தில் யாருமில்லை 
தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசித்திருந்தாள்’,


‘அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா?’ போன்ற வரிகள் எல்லாம் கற்பனை வளத்தின் உச்சம். 


கார்த்திகேயன் -அருணா இடையிலான பப்ளி காதல்
சித்ரா - ஸ்ரீகாந்த் இடையிலான சமூகப் பொறுப்புணர்வு கலந்த காதல்
கார்த்திக் அம்மா - கார்த்திக் அப்பா இடையிலான நரைகூடிக் கிழப்பருவமெய்திய காதல் 
கார்த்திகேயன் - சித்ரா இடையிலான நட்புக்காதல் 


இந்த நான்கில் ஏதேனும் ஒரு காதல் உங்கள் வாழ்வில் நிகழ்ந்திருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.


இதைப் படித்து முடித்ததும் இன்றிரவு வீட்டுக்குச் சென்று மீண்டும் ஒருமுறை ‘ரிதம்’ திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என உங்களுக்குத் தோன்றினால் நீயும் எனது நண்பனே!


Also Read: திருப்பதி கோயிலுக்குள் முத்தம்... சர்ச்சையில் நடிகை ஸ்ரேயா!