ஒவ்வொரு வருடமும் அதிக விடுமுறை நாட்களை கொண்ட பொங்கல் பண்டிகைக்கு என்று மாஸ் ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். ஏனென்றால், அப்போது தான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எடுக்க முடியும் என்பது தயாரிப்பாளர்களின் கணிப்பு. ஆனால், உண்மையில் ஒரு சிறந்த படைப்பு எப்போது ரிலீஸானாலும் ரசிகர்கள் தங்களின் வரவேற்பை கொடுத்து கொண்டு தான் உள்ளனர்.


பொங்கல் ரிலீஸ் படங்கள்:


அதற்கு உதாரணம், லப்பர் பந்து. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். சிறு பட்ஜெட் படம் என்பதை தாண்டி வெற்றி கண்டது.  இப்படி நல்ல கதை கொண்ட படத்திற்கு எப்போது ரிலீசானாலும் ரசிகர்களின் வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எத்தனை படங்கள் வெளியாக இருக்கின்றன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.




அஜித் குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வர இருந்த நிலையில் பொங்கல் ரிலீசிலிருந்து பின் வாங்கியுள்ளது. இயக்குநர் பாலா மற்றும் அருண் விஜய் காம்போவில் உருவான வணங்கான் படம் திட்டமிட்டபடி ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வீர தீர சூரன் 2'. தமிழ் சினிமாவில் முதல் முறையாக பார்ட் 2 படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். புரோவிஷன் ஸ்டோர் வைத்திருக்கும் விக்ரம் அன்பான கணவனாகவும், தந்தையாகவும் நடித்துள்ளார். குற்றவியல் சம்பவத்தில் ஈடுபடுவதும், மர்மமான வேலையை சுற்றி நடக்கும் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


இதே போன்று இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கேம் சேஞ்சர். ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ராம் சரண் அப்பா மற்றும் மகன் என்று இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.




 
இந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் . இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் காதலிக்க நேரமில்லை. இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.


அதே போல் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் 'படைத்தலைவன்'. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதே போன்று சிபிராஜ் நடித்துள்ள டென் ஹவர்ஸ், 2கே லவ் ஸ்டோரி, மெட்ராஸ்காரன் என்று இந்த பொங்கல் பண்டிகைக்கு 7 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. ஆனால் எந்தப் படம் ரசிகர்கள் மனதை கவர்ந்து ஹிட் அடிக்கும், இதில் எந்த படம் பின்வாங்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.