2023 Celebrities Death: 2023ம் ஆண்டில் மாரிமுத்து முதல் விஜயகாந்த் வரை நடந்த திரைபிரபலங்களின் மரணம் கோலிவுட்டை உலுக்கியுள்ளது. 

பிரபலங்களின் மரணம்:


2023ம் ஆண்டில் அரசியல், சினிமா, பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் கோலிவுட் வட்டாரத்தில் 2023 சாதரண ஆண்டாக இல்லை. இந்த ஆண்டில் நிகழ்ந்த தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் மரணம் திரைத்துறையை அதிர்ச்சி அடைய செய்தது. 

 

அந்த வகையில், பிரபல இயக்குநரும், நடிகருமான சண்முகப் பிரியன் உயிரிழந்தார். வாழும் ஆலயம், பாட்டுக்கு நான் அடிமை, உதவும் கரங்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன், வெற்றிவிழா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 

விஸ்வநாத், டி.பி.கஜேந்திரன்:


இதேபோன்று இயக்குநர் கே. விஸ்வநாத் 92 வயதில் முதுமை காரணமாக உயிரிழந்தார். இவர் ரசிகர்களின் மனதில் என்றும் இடம்பெற்ற சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன் குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகினி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்திய சினிமாவின் உயரிய தாதா சாகேப் பால்கே மற்றும் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். 

 

அதேவரிசையில் இயக்குநர் டி.பி. கஜேந்திரன் பிப்ரவரி 5ம் தேதி உடல்நல குறைவால் காலமானார். இவர் கே. பால்சந்தர், விசு, ராம நாராயணன் உள்ளிட்டோர் இயக்கிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர். 

மயில்சாமி, எஸ்.எஸ்.சக்கரவர்த்தி:


இயக்குநர்களின் வரிசையை தொடர்ந்து நடிகர் மயில்சாமி தனது 57வது வயதில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் குணச்சித்தர நடிகராகவும், காமெடி நடிகராகவும் இருந்த மயில்சாமி மிமிக்ரி செய்து ரசிகர்களை கவர்ந்தவர். 

 

கடந்த ஏப்ரல் மாதம் பிரபல தயாரிப்பாளர் எஸ்.எஸ். சக்கரவர்த்தி உயிரிழந்தார். அஜித் நடித்த சிட்டிசன், ராசி, வாலி, முகவரி, ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். 

 

மனோபாலா, நடிகை சிந்து:


கடந்த மே மாதம் இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா கல்லீரல் பிரச்சனையால் உயிரிழந்தார். கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்த மனோபாலாவின் இழப்பு திரைத்துறையை அதிர்ச்சி அடைய செய்தது. 

 

தொடர்ந்து மலையாளம், தமிழ் படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்த கசன்கான் கடந்த ஜூன் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதே வரிசையில் ஒருதலை ராகம், பாலைவனச்சோலை, வள்ளி உள்ளிட்ட படங்களில் நடித்த கைலாஷ் நாத் உயிரிழந்தார். 

 

கடந்த ஆகஸ்ட் மாதம் அங்காடி தெரு, நாடோடி படங்களில் நடித்த நடிகை சிந்து புற்றுநோயால் உயிரிழந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் ப்ரண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கிய இயக்குநர் சித்திக் மாரடைப்பால் உயிரிழந்தார். ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி  கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். 

மாரிமுத்து, ஜூனியர் பாலையா:


திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து கடந்த செப்டம்பர் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மரணத்தால் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த என் உயிர் தோழன் படத்தில் நடித்த பாபு பக்கவாத நோயால் உயிரிழந்தார். 

 

என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை கடந்த அக்டோபர் மாதம் நீரழிவு நோயால் உயிரிழந்தார். மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா கடந்த நவம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம்,  சாட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.

 

போண்டாமணி:



உயிருள்ள வரை உஷா, கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி போன்ற படங்களில் நடித்த நடிகர் கங்கா கடந்த நவம்பர் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். புதுமை பெண், மௌனராகம், ஒரு கைதியின் டைரி, சின்ன கவுண்டர். அரண்மனை காவலன், காதல் கோட்டை உள்ளிட்ட படங்களில்  நடித்திருந்த சங்கரன் கடந்த டிசம்பர் 14ம் தேதி உயிரிழந்தார். டிசம்பர் 24ம் தேதி நடிகர் போண்டாமணி உடல்நல குறைவால் உயிரிழந்தார். இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் போண்சாமணி உயிரிழந்தார். 


விஜயகாந்த்:


கடந்த டிசம்பர் 28ம் தேதி தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பால் விஜயகாந்த் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. விஜயகாந்த் மரணம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியதாக பலரும் பகிர்ந்துக் கொண்டனர். 


இந்த ஆண்டில் முக்கிய திரை பிரபலங்களின் மறைவு சினிமா உலகத்தை அதிர்ச்சி அடைய செய்தது.