திரையுலகில் தனது 20 ஆண்டு காலத்தை நிவர்த்தி செய்திருக்கிறார் நடிகர் ப்ரியா மணி.தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ப்ரியா ஒரு தேசிய விருது மற்றும் மூன்று ஃபிலிம் ஃபேர் விருதுகளைப் பெற்றுள்ளார். பருத்தி வீரன், ராம், ராவணன், உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள ப்ரியாமணியின் நேர்காணல் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டது. அதில் அவரது திரையுலகப் பயணம் குறித்து கேட்கப்பட்டது...
“எனது திரையுலகப் பயணத்தில் தொடக்கத்தில் என்னுடைய அம்மா என்னுடன் இருந்தார். நான் சூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லும்போதெல்லாம் அவரும் என் கூட வருவார். நான் நடிக்கச் சென்றால் என்னுடன் யாராவது கூடவே இருக்கவேண்டும் என்பது அப்பாவுடைய கண்டிஷன்.அதனால் அம்மா அவருடைய வங்கி வேலையை விட்டுவிட்டு என்னுடன் பயணம் செய்தாங்க. அதன்பிறகு 2011ல் அண்ணனுக்கு திருமணம் ஆச்சு.அதன்பிறகு அம்மாவை வீட்டிலேயே இருக்கச் சொன்னேன். ஒருவருடம் என்னுடைய மேனேஜர் என்னுடனே பயணம் செய்தார். அதன் பிறகுதான் என் கணவர் எனக்கு அறிமுகமானார்.என் நண்பரா என்னுடனே என்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்களுக்கு பயணம் செய்தார். சொல்லப்போனால் நான் இத்தனை வருட சினிமா பயணத்தில் இவர்களால் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்திருக்கேன். மற்ற நடிகர்கள் சொன்னதுபோல எனக்கு திரையுலகத்தில் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டதில்லை.அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. சொல்லப்போனால் திரையுலகில் முன்பை விட இப்போது பெண் கலைஞர்கள் பெரிய அளவில் அங்கீகரிக்கப்படறாங்க. பெரிய அளவில் கவனம் இருக்கு” என்றார்.
இடையில் அவரது எடை கூடியிருந்து உடல் ஆரோக்கியமற்று இருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ப்ரியாமணி அது ஹார்மோன் சார்ந்த பிரச்னையினால் ஏற்பட்டது என்றும் பிறகு மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதும் உடல் பழைய நிலைக்குத் திரும்பியதாகவும் குறிப்பிட்டார்.
ப்ரியா தற்போது கொட்டேஷன் கேங் என்கிற தமிழ் படத்திலும் மைதான் மற்றும் ஜவான் ஆகிய இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.