சரியாக இன்றைய நவம்பர் 21 ஆம் தேதியோடு 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ படம். இப்படியும் கூட காதல் கதை இருக்கும் என எண்ணி வியக்கும் அளவுக்கு இன்றும் அதன் கம்பீரம் மாறாமல் அப்படம் திகழ்கிறது என்பதே இயற்கை எவ்வளவு தரமான படம் என்பதற்கு சான்று..!






தமிழ் சினிமாவும் காதலும்


கண்டதும் காதல், பார்க்காத காதல், கண் மீது மட்டும் காதல், பள்ளி காதல், கல்லூரி காதல்,  என எத்தனையோ வகை வகையான காதலை தமிழ் சினிமாவும் ஒவ்வொரு வாரமும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. இதில் எத்தனை காதல் நம்மை ஈர்க்கிறது என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். காரணம் காதலும், அதன் வெற்றி, தோல்வியும் நம் அடிமனதை வருடிவிட்டால் ஆண்டு நூறு ஆனாலும், அந்த படத்தை மறக்கவே முடியாது. அந்த வகை தான் ‘இயற்கை’யும். ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய வெண்ணிற இரவுகள் கதையை தழுவி எடுக்கப்பட்டதே இயற்கை படமாகும். இந்த கதை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. 






மறக்க முடியாத படக்குழு 


பொதுவுடைமை சிந்தனை கொண்ட இயக்குநர்களில் ஒருவரான மறைந்த எஸ்.பி.ஜனநாதன் கைவண்ணத்தில் மருதுவாக ஷாம், நான்சியாக குட்டி ராதிகா, காணாமல் போன கப்பல் கேப்டனாக அருண் விஜய், பாதிரியாராக பசுபதி, கருணாஸ் என அனைத்து கேரக்டர்களும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். எஸ்.பி.ஜனநாதனுக்கு இது முதல் படம் என சொல்ல முடியாத அளவுக்கு மிக நேர்த்தியாக இயக்கியிருப்பார். வித்யாசாகரின் பாடல்கள், பின்னணி இசை, குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சி என வேற லெவலில் நம்மை கட்டிப் போட்டிருப்பார். 


கதையின் கரு 


பொதுவாக கதாநாயகனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல் இருக்கும் படங்களை பார்த்திருப்போம். ஆனால் இப்படம் அப்படியே தலைகீழாக 2 காதல்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டு முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் பெண்ணின் கேரக்டர், தமிழ் சினிமாவுக்கே புதுசாக அமைந்திருந்தது. ராமேஸ்வரம் துறைமுகத்துக்கு வரும் கப்பலில் வேலை செய்யும் இளைஞருக்கு (ஷாம்) அங்கு கப்பலில் வருபவர்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யும் நான்சி (குட்டி ராதிகா) மீது காதல் ஏற்படுகிறது.






ஆனால் நான்சியோ எப்பவோ வந்து சென்ற கப்பலின் கேப்டன் அருண் விஜய் மீது காதல் கொண்டு அவருக்காக காத்திருக்கிறார். இதில் ஷாமின் காதல் பெரிதா? குட்டி ராதிகாவின் காத்திருப்பு பெரிதா?  என செல்லும் கதையில் கடைசியில் ஷாம் மீது காதல் கொண்டு குட்டி ராதிகா அவரை திருமணம் செய்ய நினைக்கும் நேரத்தில் அருண் விஜய் திரும்ப வருவார். இதனால் என்ன முடிவு ஏற்படும் என்பதை அழகான கவிதை நயத்தில் முடித்திருப்பார். 


பெண் உரிமைக்கு முக்கியத்துவம் 


இந்த படத்தில் ஹீரோயினிடம் தன் காதலை ஹீரோ அனைத்து இடத்திலும் சொல்லிக் காட்டுவாரே தவிர, எந்த இடத்திலும் கட்டாயப்படுத்த மாட்டார். அதேபோல் ஹீரோயின் ஒத்துக் கொள்ளாத நிலையில் அத்துமீற மாட்டார். கடைசியில் பழைய காதல் திரும்ப கிடைக்கும் இடத்திலும், பெண்ணின் முடிவுக்கே விட்டுச் செல்வார். இப்படி பெண் என்பவள் ஆண் சொந்தம் கொண்டாடும் பொருள் இல்லை என்பதை ரசிகர்களுக்கு எளிதாக கடத்தியிருப்பார்.


அதன் தாக்கம் இன்று வரை 90ஸ் கிட்ஸ் இளைஞர்களால் மறக்க முடியாத, படங்களின் பட்டியலில் இயற்கையையும் கொண்டு சேர்த்துள்ளது. இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. படத்தில் முதலில் ஷாம் கேரக்டரில் நடிக்க நடிகர் சூர்யாவே படக்குழுவினரின் தேர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.