காதல் என்றாலே அது குளுகுளுவென இருக்கும் ஒரு உணர்வு அதிலும் சில்லுனு ஒரு காதல் என்றால் சொல்லவா வேண்டும். 2006-ஆம் ஆண்டு ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் என். கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா இடையே பூத்த அழகான மெல்லிய காதல் கதையான 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 



ரொமான்டிக் ஹீரோ, பொறுப்பான குடும்ப தலைவன் என இருவேறு குணாதிசயங்களை மிகவும் அருமையாக வெளிப்படுத்திய சூர்யா, காதலியாக உருகி உருகி காதல் செய்த பூமிகா, கணவனை நொடிக்கு நொடி காதலிக்கும் மனைவியாக ஜோதிகா இவர்கள் மூவருக்கும் பின்னணியில் நகரும் காதலை மையமாக வைத்து தான் படத்தின் கதை நகர்கிறது. 


அன்பான மனைவி, அழகான குழந்தை என மிகவும் ஜாலியாக நகரும் குடும்பத்தில் ஒரு நாள் மனைவிக்கு கணவனின் டைரி கையில் கிடைக்க கணவனின் பிளாஷ் பேக் ஸ்டோரி தெரிய வருகிறது. கதை அப்படியே வேகமாக சூர்யாவின் கல்லூரி நாட்களுக்கு நகர்கிறது. துறுதுறுவென இருக்கும் ஸ்மார்ட் ஹீரோவாக சூர்யா பயந்து பயந்து காதலிக்கும் பூமிகா அவர்களின் திடீர் திருமணம், எதிர்பாராத முறிவு என அனைத்தையும் தெரிந்து கொள்கிறாள் மனைவி ஜோதிகா. 



கணவனுக்காக எதையும் செய்ய துணியும் அன்பான மனைவி, ஒரு படி மேலே போய் கணவனின் ஆசை காதலியை சந்திக்க ஏற்பாடுகளை செய்கிறாள். கணவனை அவளுடன் அனுப்பி வைத்துவிட்டு மனைவி படும்பாட்டை எத்தனை அழகாக வெளிப்படுத்தியிருந்தார் ஜோதிகா. காதலியை மீண்டும் சந்தித்த கணவனின் ரியாக்ஷன் எப்படி இருந்தது. காதலியா? மனைவியா? கணவன் எடுத்த முடிவு என்ன? இப்படி காதலை சுற்றி நகரும் இந்த கதை ரசிகர்களின் அபிமான படமானது. 


கெளதம் - குந்தவி - ஐஸ் இவர்களுக்கு இடையே நடந்த காதல் போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் யார்? என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் அத்தனை ஆர்வமாக இருந்தார்கள். காதலால் உருகிய இப்படத்திற்கு இசையால் வடிவம் கொடுத்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். முன்பே வா என் அன்பே வா... பாடல் இன்றும் பலரின் ரிங்டோனாக இருக்கிறது. தனிமையை உணர வைத்த 'நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்' என இப்படி ஒவ்வொரு பாடலும் பின்னணி இசையும் நம்மை நனைய வைத்தது. வடிவேலு, சந்தானம் காமெடி ட்ராக்கும் இன்றும் மறக்கமுடியாத காமெடி காட்சிகளாக நிலைத்தன


இளைஞர்களின் அபிமான படமான 'சில்லுனு ஒரு காதல்' திரையரங்குக்கு படையெடுத்த அனைவரையும் குளிர வைத்து அனுப்பியது என்றால் அது மிகையல்ல. 17 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ரசிக்கக்கூடிய படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.