தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஒரு சில படைப்புகள் மட்டுமே வரலாற்றில் இடம்பெறும் அந்தஸ்தை பெற்று 'நல்ல படம்' என்ற அடையாளத்துடன் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தைப் பிடிக்கும். அப்படி ஒரு படம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பார்க்க முடியம். அந்த அந்தஸ்தைப் பெற்று தலையில் வைத்து கொண்டாடப்பட்ட படம் தான் சசிகுமாரின் 'சுப்பிரமணியபுரம்' (Subramaniapuram). இப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
1980 காலக்கட்டத்தில் இருந்த மதுரையை மண்ணை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய இப்படத்தின் மூலம் சசிகுமார் இயக்குநராக அறிமுகமானதுடன், அவரே நடித்து தயாரித்து இருந்தார். உள்ளூர் அரசியல், அதிகாரம், வேலைவெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் நண்பர்கள், நட்பு, அன்பு, காதல், துரோகம், செல்வாக்கு இப்படி அனைத்தின் கலவையாக மதுரை மண்ணை சித்தரித்த ட்ரெண்ட் செட்டர் படம்.
தோற்றம், உடை மட்டுமின்றி சாலைகள், வீடுகள், பேருந்துகள் மூலம் கூட கடந்த காலக்கட்டத்தின் சூழலை அப்படியே திரையில் கொண்டு வந்து நிறுத்திய அந்த மெனக்கெடல், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. சிறு சிறு நுணுக்கங்களைக் கூட பார்த்து பார்த்து செய்து உண்மைத்தன்மையை கொடுக்க சசிகுமார் உழைத்து இருந்தார்.
அரசியல் அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடிய ஒரு குடும்பம், அவர்களின் எண்ணம் ஈடேறுவதற்காக தன்னையே நம்பி இருந்தவர்களை அழிக்கவும் தயாராக இருந்தது பார்வையாளர்களை உலுக்கியது. வெளிப்பார்வைக்கு மரியாதைக்குரியவர்களாகவும் கவுரவமாகவும் இருப்பவர்களில் சிலர் உண்மையில் எவ்வளவு இழிவான எண்ணங்களைக் கொண்டு இருக்க முடியும் என்பதை தோலுரித்து.
80ஸ் காலகட்டத்தின் அழகான காதலை மிகவும் அழகாக வெளிப்படுத்தினர் ஜெய் மற்றும் ஸ்வாதி. வில்லனாக அறிமுகமான சமுத்திரக்கனி துரோகத்தை அற்புதமாக வெளிப்படுத்தி அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். அதே போல ஜேம்ஸ் வசந்தன் இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்தது. “கண்கள் இரண்டால்...” பாடல் ஒலிக்காத இடமே இல்லை, நாளும் இல்லை எனும் அளவுக்கு அனைவரையும் முணுமுணுக்க வைத்தது. பெரும்பாலானோர் புதிய அறிமுகங்கள் என்பதால் பார்வையாளர்களை படத்தின் கதையோடு ஒன்றிணைக்க முடிந்தது. இப்படம் சசிகுமார் முதல் சமுத்திரக்கனி வரை பலரின் திரைவாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்தது.
விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்ற 'சுப்பிரமணியபுரம்' தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. அதன் ஈர்ப்பு தான் அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர்' படம் உருவாக காரணமாக இருந்தது என அவரே கூறியுள்ளார். 16 ஆண்டுகள் மட்டுமல்ல இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மதுரை மண்ணை கதைக்களமாக கொண்டு வெளியான 'சுப்பிரமணியபுரம்' படத்தின் வெற்றியை முறியடிக்க முடியாது.