மலையாள திரையுலகம் என்றுமே எதார்த்தமான தரமான படங்களை கொடுப்பதில் கெட்டிக்காரர்கள். அந்த வரிசையில் 1989-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த திரைப்படம் 'கிரீடம்'. அப்படத்தின் தமிழ் ரீ மேக் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த 'கிரீடம்' திரைப்படம். இப்படம் இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 



நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல். விஜய் முதல் முறையாக இயக்கிய திரைப்படம் கிரீடம். இது ஒரு ரீ மேக் படம் என்றாலும் அதில் தமிழ் ரசிகர்களுடன் தொடர்புபடுத்தும் வகையில் ஒரு சிலவற்றை மாற்றி அமைத்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் அதற்காக கடுமையாக உழைக்கிறான். ஆனால் அவனது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவம் அவன் வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. தவமாய் தவமிருந்து திரைப்படத்திக்கு பிறகு கதாநாயகனின் பெற்றோராக ராஜ்கிரண் - சரண்யா அலங்கரித்தனர். ஜீ படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா இரண்டாவது முறையாக  இப்படத்தில் மீண்டும் இணைந்தார்.


இருவரின் கெமிஸ்ட்ரியும் படத்தில்  மிக அழகாக இருந்தது. இப்படம் அவர்களை கோலிவுட் சினிமாவின் மிக சிறந்த ஆன் ஸ்க்ரீன் ஜோடிகளின் பட்டியலில் இடம் பெறவைத்தது. நடிகர் சந்தானம் முதல் முறையாக நடிகர் அஜித்துடன் நண்பனாக இணைந்து காமெடியில் கலக்கிய படம் இதுவாகும். மோகன்லால் கதாபாத்திரத்தை வெகு சிறப்பாக தனது ஸ்டைலில் வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் அஜித். 


இப்படத்துக்கு கூடுதல் பலமாக இருந்து ஜி.வி. பிரகாஷ் குமார் இசை. அப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக ஹிட் அடித்தன. குறிப்பதாக அக்கம்பக்கம் பாடல் காதுகளுக்கு இனிமை சேர்த்தது. அதே போல ஆழமான வசனங்களும் திரைக்கதைக்கு பக்கபலமாய் அமைந்தது. செண்டிமெண்ட், காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தின் கலவையாக ஒரு கமர்ஷியல் விருதாக அமைந்த படம். நடிகர் அஜித் திரைப்பயணத்தில் ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது கிரீடம். 


 



கண்ணியமான போலீஸ் அதிகாரியாக மகனை பார்க்க வேண்டும் என்ற ஒரு தந்தையின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பது  தான் படத்தின் திரைக்கதை. இப்படத்திற்கு இருவேறு கிளைமாக்ஸ் காட்சிகள் இருந்தது. மலையாள வெர்ஷனில் இருந்த நெகட்டிவ் முடிவு தமிழ் ஆடியன்ஸை கவர தவறி விடும் என்பதால் சோகமான முடிவை உற்சாகமான பாசிட்டிவ் முடிவாக மாற்றி அமைத்தனர். பாக்ஸ் ஆபிசில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் படம் எதிர்பார்த்த அளவு வசூலில் வெற்றி பெறவில்லை.