பட்டனத்தில் படித்து வரும் மயில்களும், உள்ளூரில் உறங்கிக் கிடந்த சப்பாணிகளும், உள்ளூர் மைனர்களாக வலம் வந்த பரட்டைகளும் 70களில் இப்படி தான் இருந்திருப்பார்கள் என்பதற்கு இதை விட பெரிய உதாரணம் இருந்திருக்க வாய்ப்பில்லை.


தமிழ் சினிமாவின் பிதாமகன் எனப்படும் பாரதிராஜாவின் பட்டை தீட்டப்பட்ட காவியங்களில் முக்கியமான 16 வயதினிலே. கமல், ரஜினி என இரு துருவங்கள் இணைந்து நடித்தாலும், சப்பாணி கதாபாத்திரத்தில் நடித்த கமல், வெற்றிக் கோப்பையை கையில் தூக்கிக்கொண்ட படம். ஒரு கிராமப் பின்னணியை முன்னணி கதையாக தேர்வு செய்து, அதை அச்சுமாறாமல் படமாக்கிய பாரதிராஜா, பின்னாளில் கொண்டாடப்பட காரணம், 16 வயதினிலே. 






தனது முதல் படமான 16 வயதினிலே வெளியாகி 45 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் பாரதிராஜா 16 வயது இளைஞனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு 16 வயதினிலே படம், அவருக்கு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையும் தந்த திரைப்படம். 


படிப்பை முடித்துவிட்டு கிராமத்திற்கு வரும் இளம் பெண் மயில். அவர் வீட்டில் எடுபிடி வேலை பார்க்கும் சப்பாணி. அதே ஊரில், ஊர் கதைகளை பேசி அனைவரையும் டேமேஜ் செய்யும் பரட்டை. இவர்கள் தான் கதையின் கதாபாத்திரங்கள். திடீரென ஊருக்குள் வரும் கால்நடை மருத்துவருக்கு இளம் பெண் மீது மோகம். பதிலுக்கு அந்த பெண்ணும் மயங்க, இருவருக்கும் காதல். சப்பாணிக்கு மயில் மீது காதல். ஆனால், அவரை ஒரு அம்மாஞ்சியாகவே பார்க்கிறார் மயில்.






ஒரு கட்டத்தில் அந்த மருத்துவர், மயிலை கழற்றிவிட, அவமானத்தில் அவரது தாய் இறந்து போகிறார். நிற்கதியாக நிற்கும் மயிலுக்கு சப்பாணி சப்போர்ட் தர, அவரை மீண்டும் மீண்டும் டேமேஜ் செய்கிறார் பரட்டை. போதாக்குறைக்கு அந்த டாக்டரின் டார்ச்சர் வேறு. பரட்டையை சப்பாணி புரட்டி எடுத்தாரா, டாக்டரை சமாளித்தாரா, மயிலை மணந்தாரா சப்பாணி என்பது தான் 16 வயதினிலே. 


ஒரு கிராமத்தில், பல உணர்வுகளை உள்ளடக்கிய படம். பல முன்னணி இயக்குனர்கள் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய படம். இது தான் நமக்கான பாதை என பாரதிராஜாவுக்கு பெரிய தன்னம்பிக்கை அளித்தபடம். இசைஞானி இளையராஜாவின் முத்தான பாடல்களை கொண்ட படம். இப்படி இன்னும் நிறைய பெருமைகளை கொண்ட 16 வயதினிலே இதே நாளில், 45 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் படையெடுக்க வைத்தது. இன்றும் பேசப்படுகிறது.