தமிழ் திரை கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் , எடிசன் விருது என்னும் புகழ்பெற்ற விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருது உலக தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு விருதாகவும் , தமிழ் திரை கலைஞர்களுக்கு முக்கியமான அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது. தாமஸ் ஆல்வா எடிசனின் நினைவாக  இவ்விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான 14 வது எடிசன் விருது தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ள சில முக்கிய திரைப்படங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.  அந்த வகையில் தற்போது எடுக்கப்பட்ட ஆன்லைன் வாக்குப்பதிவின் அடிப்படையில் , முதல் இடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் பிடித்துள்ளது. 17 பிரிவுகளில் மாஸ்டர் திரைப்படம் பரிந்துரை பட்டியலில் முன்னணியில் உள்ளது. அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 13 பிரிவுகளில் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.







மூன்றாவது இடத்தில் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்ப்பட்டா பரம்பரை திரைப்படமும் , நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படமும் உள்ளது. இந்த இரண்டு படங்களும் 12 பிரிவுகளில் எடிசன் விருதிற்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அதே போல சூர்யா நடிப்பில் , ஞானவேல் இயக்கத்தில்  மிகப்பெரிய கவனத்தை பெற்ற ஜெய் பீம் திரைப்படம் 9 இடங்களில் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இது தவிர சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட அடித்து, வசூல் வேட்டை நடத்திய சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான மாநாடு 6 பிரிவுகளின் கீழ் எடிசன் விருதிற்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 







14 வது எடிசன் விருது வழங்கும் விழா வருகிற ஜனவரி மாதம் 9 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது.தென்னிந்திய முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் கலைஞர்களின் கலை நிகழ்சிகளுடன் விழா தொடங்கவுள்ளது. இதில் பல முக்கிய நட்சத்திரங்கள் பங்கேப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.