காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காதல் படங்களில் ஒன்றான “சிவா மனசுல சக்தி” படம் வெளியாகி இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.

Continues below advertisement

சிவா மனசுல சக்தி

2கே கிட்ஸ்கள் எப்படி இன்று லவ் டுடே படத்தை கொண்டாடுகிறார்களோ, 90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கு அப்படித்தான் விஜய் நடித்த  குஷி படம் அமைந்திருந்தது. இப்படியான 90ஸ் கிட்ஸ்களுக்கு மீண்டும் ஒரு யூத் ஃபுல்லான செம மாஸ்ஸான படமாக அமைந்தது தான் “சிவா மனசுல சக்தி”. ஊடக உலகின் முன்னணி நிறுவனமான விகடனின் முதல் வெள்ளித்திரை படைப்பாக இப்படம் வெளியாகியிருந்தது. அறிமுக இயக்குநரான ராஜேஷ் இயக்க, ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி, பேராசிரியர் ஞானசம்பந்தம் என குறைவான கேரக்டர்களே கொண்டே இப்படம் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஹீரோ, ஹீரோயின் இடையேயான முட்டல், மோதல், காதல் என கிளைமேக்ஸ் தவிர அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு படத்தை ராஜேஷ் கொடுத்திருந்தார். முதல் காட்சியே ஜீவா, அனுயா ரயில் சந்திக்கும் காட்சி வைக்கப்பட்டிருக்கும். ஜீவா தன்னை ராணுவ வீரர் எனவும், அனுயா தன்னை விமானப் பணிப்பெண் என சொல்லியும் அறிமுகம் செய்வார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் கொரியர் டெலிவரி செய்யும் ஜீவாவும், ரேடியோவில் ஆர்ஜே ஆக பணியாற்றும் சக்தியும் சந்திக்க உண்மை வெளிப்படுகிறது. அதன் பின்னர் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கலகலப்பாக சொல்லப்பட்டிருக்கும். 

ரசிக்க வைக்கும் காட்சிகள் 

படத்தோட அஸ்திவாரமே சிவாவாக வரும் ஜீவா - சக்தியாக வரும் அனுயா மோதல்கள் தான். அதற்கு படத்தின் வசனங்கள் மிகப்பெரிய அளவில் உதவியது. வானத்துல  போற விமான சவுண்ட் வச்சே அது என்ன விமானம்ன்னு சொல்வேன் என சீன் போடும் சக்தியாகட்டும், இந்த பக்கம் நான் ஆர்மில இருக்கிறதால எப்பவாச்சும்தான் ஊருக்கே வரமுடியும் என பொய் சொல்லும் சிவாவாகட்டும் ஒரே ஜாலி ரகளை தான்.

குட்டி குட்டி ரியாக்‌ஷன் கூட அனைவரையும் கவர்ந்தது. சந்தானத்துடன் சேர்ந்து ரேடியோ நிகழ்ச்சிக்கு போன் செய்து அனுயாவை கலாய்ப்பது, போலீஸ்காரரிடம் காதல் சோகம் பேசுவது.. கோபத்தில் பைக்கை முறுக்குவது, வாட்ச்மேனுக்கு முத்தம் கொடுப்பது, காதலி வீட்டுக்கு மதுபாட்டிலை டெலிவரி செய்வது, காதலியை சந்திக்க குடும்பத்துடன் செல்வது, கிளைமேக்ஸில் காதலி வீட்டில் உள்ள சின்ன குழந்தை காலில் விழுவது என ஒரு ஃபீல் குட் மூவிக்கான அத்தனை அம்சங்களையும் இப்படம் கொண்டிருந்தது.  இதேபோல் சந்தானம் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். நண்பனால் ஏற்படும் தொல்லையை பொறுத்து அவரோடு எல்லா நிலையிலும் பயணிப்பதை ஜாலி மூடில் நடித்திருப்பார். ஜீவா, அனுயா சண்டை, சத்யனுக்காக ரிஜிஸ்டர் ஆபீஸில் நடக்கும் சண்டை என அனைத்தும் காமெடி மோடில் பயணிக்கும். அவ போய் ஆறு மாசம் ஆகுது, ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி, நல்லவங்க பேச்சு ரீச் ஆகும்.. என்ன கொஞ்சம் லேட் ஆகும் என சந்தானத்தின் எல்லா வசனமும் இன்றைக்கும் இளைஞர்களுக்கு மனப்பாடம். 

படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. இதில் இடம்பெற்ற ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் என்றைக்கும் காதலர்களின் சோககீதங்களில் ஒன்றாக இடம் பெற்றிருக்கும். இதேபோல் ஒரு அடங்காப்பிடாரி மேலதானே பாடலில் நடுவில் ரஜினி குரலில் வசனம் ஒன்று இடம் பெறும். இதற்கு சிவகார்த்திகேயன் குரல் கொடுத்திருந்தார். இதேபோல் ஆர்யா வரும் சீனும் சர்ப்ரைஸ் ஆக இருக்கும். சொல்லப்போனால் அவர் வந்த பின்னரே சக்திக்கு சிவா தன்னை காதலிக்கிறார் என்பது புரியும். அதேசமயம் லவ் பண்றானு தெரிஞ்சதும் க்ரீட்டிங் கார்டு தூக்கி போட்டு சந்தோசப்படும் இடமும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 

ஆம்பளைங்க அழுதா எனக்கு தாங்காது, அப்புறம் நானும் சேர்ந்து அழுதுருவேன் என சக்தி அப்பாவாக வரும் பேராசிரியர் ஞானசம்பந்தம் பேசும் கிளைமேக்ஸ் வசனம் படம் பார்ப்பவர்களுக்கு ரகளையாக இருந்திருக்கும். கிளைமேக்ஸ் காட்சி விமர்சனத்தை சந்தித்தாலும், வித்தியாசமாக அமைக்கப்பட்ட அந்த காட்சி சாதாரண காதல் படம் என்ற விமர்சன ரீதியில் இருந்து வேறுபட்டு இருந்தது. 

இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் சிவா மனசுல சக்தி  காம்போ காதலர்களின் ஸ்பெஷலாகவே இருக்கும்..!