தமிழ் சினிமாவில் பல வகையான படங்கள் பல பரிமாணங்களில் அவ்வப்போது வெளியாகி அற்புதங்களை நடத்தும். அப்படி படத்தில் நடித்த கதாபாத்திரங்களே அடையாளமாக மாறி மாயாஜாலம் செய்த ஒரு திரைப்படம் தான் 2013ம் ஆண்டு வெளியான 'மூடர் கூடம்' . பெரிய கதை என்று ஒன்று இல்லாவிட்டாலும் நான்கு முட்டாள் திருடர்களை  சுற்றி நடக்கும் குட்டி குட்டி கதைககளின் கலவையாக கலர்புல்லாக வெளியான மூடர் கூடம் இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவுக்கு செய்கிறது.


 



கரடு முரடான தோற்றம், வித்தியாசமான முக அமைப்பு, சில்மிஷ சேட்டைகள் கொண்ட நவீன், சென்றாயன், வெள்ளைச்சாமி, சபேஷ் என நான்கு இளைஞர்கள். சமூகத்தாலும், உறவுகளாலும் வாழ்க்கையில் சந்தித்த அவமானங்கள், துன்பங்கள் என அனைத்தும் அவர்களை ஒரு கட்டத்தில் ஒன்றிணைக்கிறது. 


கஞ்சா விற்கும் இளைஞனாக சென்றாயன், பெற்றோரை இழந்ததால் பணக்கார மாமாவை தேடி வரும் வெள்ளைச்சாமி,  முட்டாள், உதவாக்கரை என குடும்பத்தால் அனாதையாக விரட்டியடிக்கப்பட்ட குபேரன், தங்கையின் ட்ரீட்மெண்டுக்கு பணம் கேட்ட மருத்துவரை கொலை செய்து சீர்திருத்த பள்ளியில் படித்து வேலையில்லாமல் சுற்றி திரியும் இளைஞனாக நவீன் என நான்கு இளைஞர்களும் சென்னையில் போலீஸ் ஸ்டேஷனில் லாக் அப்பில் ஒன்றிணைகிறார்கள்.   


வெள்ளைச்சாமியின் பணக்கார மாமா வீட்டை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள். சென்ற இடத்தில் வரும் காதல், காமெடி, சண்டை என பல எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்த படம் தான் மூடர் கூடம். 


தனித்து விடப்பட்ட இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மாறுபட்ட சூழல், அன்பு கிடைக்காத சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகள், பணத்தின் அடிப்படையில் பாகுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டியது பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. யாருமே முழுமையான முட்டாள்களும் அல்ல முழுமையான புத்திசாலிகளும் அல்ல. சமயம் சந்தர்ப்பம் தான் அவர்களின் நடத்தையையும் எதிர்காலத்தையும் தீர்மானம் செய்கிறது என்ற கருத்தை நகைச்சுவை கலந்து ஒரு முழு நீள பொழுதுபோக்கு படமாக அமைத்து இருந்தார் இயக்குனர் நவீன். 


படத்தில் சீரியஸ் அம்சம் என எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடியாகவே அமைக்கப்பட்டது பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து. ஓவியா, ஜெயப்பிரகாஷ், சிந்து ரெட்டி என பலரும் அவர்களின் பங்களிப்பை சிறப்பாக கொடுத்தது படத்திற்கு பலம் சேர்த்தது. சென்ராயனுக்கு இப்படம் நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 


ஒயிட் ஷெடோ நிறுவனத்தின் தயாரிப்பில் நவீன் எழுதி இயக்கி நடித்த  மூடர் கூடம் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு பணிகளை டோனி ஜான் மேற்கொள்ள இசையமைத்து இருந்தார் நடராஜன் சங்கரன். 


இயக்குநர் பாண்டிராஜின் சிஷ்யரான இயக்குநர் நவீனுக்காக 'பசங்க' புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பாண்டிராஜே இப்படத்தை வாங்கி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது வரையில் தமிழ் சினிமாவில் வெளிவராத ஒரு வித்தியாசமான கதையை மிகவும் துணிச்சலோடு தரமாக நகைத்துவை கலந்து கொடுத்த நவீனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்  குவிந்தன.