1952 ம் ஆண்டு முதல் கோவை மக்களவை தொகுதி 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோவை மக்களவை தொகுதியை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள், கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தன. அதன் காரணமாக இதுவரை கோவை மக்களவை தொகுதியில் திமுகவும், அதிமுகவும் ஒரே ஒரு முறை மட்டுமே நேரடியாக மோதியுள்ளன. இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோத உள்ளன.


கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் கோவை மாநகர மாவட்ட அவைத்தலைவராக உள்ள கணபதி ராஜ்குமார் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் இரண்டாம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோவை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐடி விங்க் மாநிலத் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.


கடந்த 1991 முதல் 1996 வரை சிங்காநல்லூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த சிங்கை கோவிந்தராசுவின் மகன் சிங்கை ராமச்சந்திரன். 1987 ம் ஆண்டு பிறந்த இவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் இவருக்கு ராமச்சந்திரன் எனப் பெயர் வைத்துள்ளார். கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஐஐஎம் அகமதாபாத்தில் எம்.பி.ஏ. படித்தார். அப்போது மாணவர் சங்கத் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.


அரசியல் பணி


மார்ச் 2016 இல் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக ராமச்சந்திரனை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா நியமித்தார். அவர் தற்போதைய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக உள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவளித்தவர்களில் இவரும் ஒருவர். பன்னீர்செல்வத்திற்கு ஆதரவை வழங்கியதை அடுத்து, பிப்ரவரி 2017 இல், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி வி.கே.சசிகலாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இரு அணிகளும் இணைந்ததையடுத்து, மீண்டும் அதிமுக ஐடி பிரிவு மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். வரதராஜபுரம் பகுதியில், கடந்த 10 ஆண்டுகளாக இலவசமாக இ சேவை மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சிங்கை ராமச்சந்திரனுக்கு முதல் முறையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர் என்பதாலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பொள்ளாச்சி வேட்பாளர்




பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அப்புச் சாமி (எ) கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி வட்டம் திவான்சா புதூரைச் சேர்ந்த எம்.அப்புச்சாமி கவுண்டர் மகன் கார்த்திகேயன் (45). குமரகுரு கல்லூரியில் பிடெக் (டெக்ஸ்டைல்ஸ்), சிடிசிஎஸ், சிஐடிஎப் (வங்கித் தேர்வு) படித்துள்ளார். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கும் உள்ளது. லண்டன் ஐசிஐசிஐ வங்கி மற்றும் லாயிட்ஸ் வங்கி (பர்மிங்காம்) என வெளிநாட்டில் பணி புரிந்துள்ளார். இவரது தந்தை எம்.அப்புச்சாமி ஆனைமலை ஒருங்கிணைந்த ஒன்றிய செயலாளராகவும், மாசாணி அம்மன் திருக்கோவிலில் அறங்கா வலர் குழு தலைவராகவும் இருந்துள்ளார்.  இவரது மனைவி சாந்தி தற்போது ஆனைமலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக உள்ளார்.  இவரது மகன் விஸ்ரத்(12)  மகள் மதுநிகா(10) ஆகியோர் பள்ளியில் படித்து வருகின்றனர்.