நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக 18வது மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் அந்த அந்த தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அதிமுக சார்பில் ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டப்பட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பெண் வேட்பாளர் களம் காண்கிறார். அவர் தான் சிம்லா முத்துச்சோழன்..


யார் இந்த சிம்லா முத்துச்சோழன்:


கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்டவர். இவர் வளர்ந்தது, படித்தது சென்னையில். இவரது இயற்பெயர் ஆண்டனி சிம்லா ஷினி, இவருக்கு ஆதவன் என்ற ஒரு மகன் உள்ளார். மேலும் இவர் கேளம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் 1999 முதல் 2002 வரை பிபிஏ படித்தார்.  அதன்பின் 2005 -2008 வரை பெங்களூரில் உள்ள ராஜீவ் காந்தி கல்லூரியில் எல்எல்பி படித்து 2009இல் வழக்கறிஞரானார். 


சமூகப்பணி:


சிம்லா முத்துச்சோழன் 2010 ல் இருந்து மணிமேகலை அமிட்டி ஃபார் சோஷியல் சர்வீஸ் (MASS) என்ற அமைப்பின் மூலம் இலவச மருத்துவ முகாம், இலவச சட்ட ஆலோசனை மற்றும் பல வகையான நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கி தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை செய்து வந்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் திருநெல்வேலி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது சீவலப்பேரியில் உள்ள குப்பங்குறிச்சி என்ற கிராம மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கி உள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் தொகுதியில் உள்ள ஏரல் ஒன்றியத்தில் உள்ள மணத்தி கிராம மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள்,  துணிமணிகள் மற்றும் பாத்திரங்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசியல் பயணம்:


முன்னாள் பெண் அமைச்சர் சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் ஆவார்.  சற்குணப்பாண்டியன் ஒருமுறை சமூகநலத்துறை அமைச்சராகவும், மற்றும் இருமுறை MLA ஆகவும் இருந்து உள்ளார். வழக்கறிஞர் தொழில் செய்து வரும் சிம்லா, கிட்டத்தட்ட 20 வருடங்களாக திமுகவில் பணியாற்றி வந்தார். முதலில் வடசென்னை மகளிர் வழக்கறிஞர் அணியில் அமைப்பாளராக இருந்தார். பின்னர் மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார்.  சிம்லா முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தீவிர விசுவாசி என கூறப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்கே நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் களம் கண்டார். அப்போது அவருக்கு 57,673 வாக்குகள் கிடைத்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து களம் கண்டவர் என்ற முறையில் மக்களுக்கு மத்தியில் பிரபலமானார். ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத  நிலையிலும், தொடர்ந்து திமுகவில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில்  இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் கடந்த 10  நாட்களுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகி அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த சூழலில் தான் தற்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருகிறது. 


திருநெல்வேலி தொகுதியில் போட்டி எப்படி?


நெல்லை தொகுதியை பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வாக்குகள் இருப்பதை கணக்கில் வைத்து இவருக்கு கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு அதிமுகவை பொருத்தவரை கூட்டணி பெரிய அளவில் இல்லாததால் நிர்வாகிகள் பலரும் போட்டியிட முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலும், வாக்குகளை வைத்தும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.