நாட்டின் பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கையானது ஜூன் நான்காம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து நடைமுறையில் உள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மேலும் 20.03.2024 முதல் 27.03.24 வரை வேட்பு மனு தாக்கலானது நடைபெற உள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் ஒவ்வொரு தொகுதி வாரியாக பாதுகாப்புடன் பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரிக்கு சென்ற நெல்லை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கார்த்திகேயன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணும் அறை, வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதே போன்று மையத்தில் வாக்கு எண்ணும் மேஜைகள் அமைப்பது, பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது, கட்டுப்பாட்டு அறை அமைப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவராவ், மாநகர காவல் ஆணையர் மூர்த்தி, காவல் துணை ஆணையர் கீதா, பாளையங்கோட்டை வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
அதே போன்று தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணம் உள்ளிட்ட பொருட்கள் பறக்கும் படை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும். பின்னர் அதற்கான உரிய ஆவணங்கள் சமர்பித்தால் அது விடுவிக்கப்படும். இந்த நிலையில் 19.03.24 அன்று மதியம் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட உவரி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 85 வயதிற்கு மேற்பட்ட மூத்தக்குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான நடைமுறையும் தொடங்கப்பட்டுள்ளது, திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை ஆலங்குளம் தொகுதியில் 2092 மூத்தகுடி வாக்காளர்களும், 1183 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், திருநெல்வேலி தொகுதியில் 4794 வாக்காளர்களும், 1368 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 2934 வாக்காளர்களும், 983 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், பாளையங்கோட்டை தொகுதியில் 5116 வாக்காளர்களும், 1369 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், நாங்குநேரி தொகுதியில் 2963 வாக்காளர்களும், 1481 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் , இராதாபுரம் தொகுதியில் 2736 வாக்காளர்களும், 1491 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் என மொத்தமாக 23,635 மூத்தகுடி வாக்காளர்களும், 7875 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இந்த நிலையில் தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வதற்கான 12D படிவத்தினை மேலப்பாளையம் பகுதியில் அவர்களது வீடுகளுக்கு சென்று மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சிவசங்கரன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் வழங்கினர்.