பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமாதாஸ் அறிவித்தார். மேலும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாமக மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கரை பாமக அறிவித்துள்ளது.
விளையாட்டு டூ அரசியல்
முரளி சங்கருக்கு சிறு வயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் சக மாணவர்களால் கால்பந்து விளையாட தகுதியற்றவர் என ஓரம் கட்டப்படஇவர், பின்னர் அதனையே சவாலாக எடுத்துக் கொண்டு விளையாட்டு துறையில் வெற்றி பெற்று சாதித்துக் காட்டியவர். தனது பத்தாவது வயதிலிருந்து Liverpool Football Clubன் தீவிர ரசிகரான முரளி சங்கர், 17 வயதில் பள்ளிகளுக்கிடையேயான மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2007-ல் பெங்களூருவில் Bangalore Kickers FC என்ற கிளப்பில் சேர்ந்து, அந்த அணிக்காக ஒரே சீஸனில் 14 கோல்களை அடித்துள்ளார்.
டெல்லியில் படிப்பு
அதன் பிறகு தலைநகர் டெல்லிக்குச் சென்று எம்பிஏ படித்தார், அங்கு Delhi Kop FC க்காக விளையாடியுள்ளார். இடையில் எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவு ஏற்பட, தனது கால்பந்துக் கனவு அவ்வளவு தான் என நினைத்துள்ளார். ஆனால், விளையாட்டுத்துறை அவரை விடுவதாக இல்லை. பிரெஞ்சு கால்பந்து கிளப்பில் முக்கியப் பதவியில் அமர்ந்தார். ஆறுமாதங்களுக்குப் பிறகு பிரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அரசியலில் ஆர்வம்
முரளி சங்கர் 2015ம் ஆண்டு சொந்த ஊர் திரும்பினார். சில மாதங்களிலேயே பாமகவின் அரசியல் பணியால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்பினார். 2016ம் ஆண்டே அவருக்கு ஆரூர் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்தது. அத்தேர்தலில் வெற்றி வசப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக 2021ம் ஆண்டு வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிட்டார்.
கிராமம் தோறும் விளையாட்டு திடல்
கிராமம் தோறும் விளையாட்டு திடல் அமைத்து இளைஞர்களின் உடலையும் உள்ளத்தையும் வலிமையாக வைத்து இருக்க உதவுவேன் என்ற உறுதிமொழியோடு பாமக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் களமிறங்கி இறங்கினார் முரளி சங்கர். இருப்பினும் வெற்றி தன்வசப்படவில்லை, இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாமக மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கரை வேட்பாளராக அறிவித்துள்ளது. விளையாட்டு துறையில் கால்பந்தாட்ட வீரராகவும், பயிற்சியாளராகவும் வெளிநாடுகளில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.