நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக மாறியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுவதாலும், கட்டாய வெற்றியை நோக்கி திமுக, அதிமுக போட்டியிடுவதாலும் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ள திமுக, கடைசியாக 1996 ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1998 மற்றும் 2014 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் திமுக படுதோல்வி அடைந்தது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் கமல்ஹாசன் மற்றும் சிபிஎம் கட்சிக்கு கோவை தொகுதியை திமுக விட்டுத்தராமல் நேரடியாக களமிறங்கியுள்ளது.
கோவை தொகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், தேர்தல் பணிகளை செய்து வருகிறது. மேற்கு மண்டல பொறுப்பாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், கோவைக்கு பொறுப்பு அமைச்சர்களாக டிஆர்பி ராஜா மற்றும் முத்துசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கோவை தொகுதியில் திமுகவில் பொள்ளாச்சியை சேர்ந்த தொழிலதிபரும், ஐடி விங்க் மாநில இணைச்செயலாளருமான மகேந்திரன் அல்லது திமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் மருத்துவர் கோகுல் கிருபா சங்கர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கோவை மாநகர மாவட்ட அவைத்தலைவராக உள்ள வேட்பாளராக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டார்.
அதிமுகவில் துவங்கிய அரசியல் பணி
59 வயதான கணபதி ராஜ்குமார், கணபதி பகுதியை சேர்ந்தவர். எம்.ஏ, எல்.எல்.பி, பிஎச்டி படித்துள்ள இவர், விவசாயம் செய்து வருகிறார். அதிமுகவில் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருந்து வந்த கணபதி ராஜ்குமார், 3 முறை கோவை மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். இரண்டு முறை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக இருந்த இவர், 2014 ம் ஆண்டு நடந்த கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 வரை கோவை மாநகராட்சி மேயராக இருந்தார். எஸ்.பி. வேலுமணி ஆதரவாளராக இருந்த இவர், அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் எஸ்.பி. வேலுமணி உடன் மோதல் ஏற்பட்ட நிலையில், கட்சி பணிகளில் இருந்து அவர் ஓரங்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2020இல் திமுகவில் கணபதி ராஜ்குமார் சேர்ந்த நிலையில், அவருக்கு மாநகர மாவட்ட அவைத்தலைவர் பதவி தரப்பட்டது. திமுகவில் வேட்பாளராக பலர் போட்டியிட்ட நிலையில், மற்றவர்களை தவிர்த்து இந்த தேர்தலில் கணபதி ராஜ்குமாருக்கு வாய்ப்பு கிடைக்க செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவே காரணம் என கூறப்படுகிறது.
திமுக வேட்பாளராக அறிவிப்பு
செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக இருந்த இவர், திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என திமுகவினர் மட்டுமின்றி, கணபதி ராஜ்குமாரே எதிர்பார்க்கவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் தனக்கு கொடுத்த வாய்ப்பினை, நன்கு பயன்படுத்திக்கொண்டு திமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறார்.
அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் எக்ஸ் தளத்தில் ’ஐ அம் வெயிட்டிங்’ என சவால் விடுத்தார். ஆனால், திமுக வேட்பாளர் அண்ணாமலை பற்றியே பேசாமல் அமைதி காக்கிறார் என்று கூறப்பட்டாலும், பிரச்சாரத்தின்போது அவரது எதிர்ப்பை காட்டமாக தெரிவிப்பார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கோவையில் போட்டியிடும் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கும், கருத்துகளுக்கும் கணபதி ராஜ்குமார் கொடுக்கும் பதிலடி, கோவை தொகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவை வெற்றி பெறச் செய்யும் என்று அக்கட்சியின் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.