சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த காசி என்னும் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

Continues below advertisement

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் 26 கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க் கட்சியான அதிமுக கூட்டணியில் 7 கட்சிகள் இணைந்துள்ளன. நாம் தமிழர் கட்சியும் தமிழக வெற்றிக் கழகமும் தனித்தனியாகக் களம் காண்கின்றன. 

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச் செயலாளர் என பல முகங்களைக் கொண்ட எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் காசி யார்? இதோ காணலாம்.

Continues below advertisement

யார் இந்த காசி?

காசி திமுக மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் ஆவார். இவர் ஜலகண்டாபுரம் பேரூராட்சித் தலைவராகவும் உள்ளார். பி.ஏ. படித்துள்ள இவர் ஜவுளி நிறுவனம் வைத்திருப்பதோடு, விவசாயமும் செய்து வருகிறார்.

இவரின் தாய் - காளியம்மாள், தந்தை- சின்னத்தம்பி மற்றும் மனைவி அமுதா. காசிக்கு தற்போது வயது 66 ஆகிறது. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதன்முறையாக திமுக வேட்பாளராக காசி நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் பலம் வாய்ந்த வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது. 

எடப்பாடி தொகுதி ஓர் அறிமுகம்

சேலம் மாவட்டத்தில் இந்தத் தொகுதி அமைந்துள்ளது. இங்கு வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், அதற்கு அடுத்தபடியாக கொங்கு வேளாளர், முதலியார் சமூகத்தினர்களும் உள்ளனர். இத்தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 757 பேர், பெண்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 597 பேர், மூன்றாம் பாலினத்தினர் 24 பேர் என மொத்தம் 2 இலட்சத்து 84 ஆயிரத்து 378 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி 6ஆவது முறையாகவும், திமுக சார்பில் சம்பத் குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா, அமமுக சார்பில் பூக்கடை சேகர் ஆகியோரும் போட்டியிட்டனர். இதில் எடப்பாடி பழனிசாமி வெற்றிவாகை சூடியது குறிப்பிடத்தக்கது.