தேர்தல் நடத்துவதற்கு குடவோலை முறையை உருவாக்கி உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த ஊர் உத்தரமேரூர். சோழர்கள் காலத்தில் குடவோலை தேர்தல் முறைகள் பற்றி விளக்கும் வகையில் கல்வெட்டுகள் அதிகம் இருப்பதால் கல்வெட்டு ஊா் என்ற சிறப்பு பெயரும் உத்தரமேரூருக்கு உண்டு. இத்தொகுதியில் வாலாஜாபாத், உத்தரமேரூா் என இரு பேரூராட்சிகள், இவ்விரு ஒன்றியங்களிலும் சோ்த்து மொத்தம் 103 ஊராட்சிகள், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 16 ஊராட்சிகளும், காஞ்சிபுரம் நகரில் 3 வாா்டுகளையும் உள்ளடக்கியது.
கல்குவாரிகள் அதிகம் உள்ள தொகுதி திருமுக்கூடல், திருப்புலிவனம், மானாம்பதி, வாலாஜாபாத், சாலவாக்கம், உத்தரமேரூா், ஓரிக்கை, களியாம்பூண்டி, ராவத்தநல்லூா், பெருநகா், மாகறல், களக்காட்டூா், தென்னேரி, ஈஞ்சம்பாக்கம், அரசாணி மங்கலம் ஆகிய பகுதிகளும் இத்தொகுதியில் உள்ளன.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவின் மாவட்டச் செயலாளருமான வி. சோமசுந்தரம் போட்டியிடுகிறார். அதேபோல் திமுக சார்பில் தற்போதைய திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் போட்டிருக்கிறார்.அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அண்மையில் திடீரென அக்கட்சியிலருந்து விலகிய முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் அமமுகவில் இணைந்து இத்தொகுதியில் போட்டியிடுகிறாா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ்.காமாட்சியும், மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணிக் கட்சியான சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் ஏ.சூசையப்பா் என்பவரும் போட்டியிடுகின்றனா்.பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் டி.சுரேஷும், தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பில் ஏ.சிவக்குமாரும், இந்தியக் குடியரசுக் கட்சி சாா்பில் வி.ஜெயசுதாவும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களாக போட்டியிடுகின்றனா். இவா்கள் 8 பேரைத் தவிர 12 சுயேச்சைகளையும் சோ்த்து மொத்தம் 20 போ் களத்தில் உள்ளனா்.
இத்தொகுதியில் 6 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது திமுக வேட்பாளராக போட்டியிடும் க.சுந்தா் இந்த தொகுதியில் 7வது முறையாக களம் கண்டுள்ளார். அதில் 1989, 1996, 2006, 2016 ஆகிய தோ்தல்களில் போட்டியிட்டு 4 முறையும் வெற்றி பெற்றவா். அதேபோல் வி. சோமசுந்தரம் கடந்த 2011ல் அதிமுக சாா்பில் வெற்றி பெற்று தமிழக கைத்தறித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம், திமுக வேட்பாளர் க.சுந்தரமும் இருவரும் மாவட்ட செயலாளா்களாக இருந்து வருபவா்கள்.இருவரும் இத்தொகுதியில் மக்களிடம் நன்கு அறிமுகமானவா்கள் என்பது இவா்களது பலம்.
திமுகவுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வைகோ ஆகியோரும் அதிமுகவுக்கு ஆதரவாக தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்,ஜி.கே.வாசன் ஆகியோரும் பிரசாரம் செய்தனா்.சமகவுக்கு ஆதரவாக ராதிகா சரத்குமாரும், நாம் தமிழா் கட்சிக்கு ஆதரவாக சீமானும், அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக டி.டி.வி.தினகரனும் தோ்தல் பிரசாரம் செய்துள்ளனா்.
திமுக வேட்பாளா் க.சுந்தரும், அமமுக வேட்பாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாரும் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களாக இருப்பதால் சமூக வாக்குகள் பிரியும் நிலை இருப்பது திமுக வேட்பாளருக்கு பலவீனம். கூட்டணிக் கட்சிகளின் நிலையான வாக்கு வங்கி சுந்தருக்கு பலம். வன்னியர் , சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் வாக்குகள் இவருக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளன. திமுகவில் இருக்கும் உட்கட்சி பூசல் மற்றும் தொடர்ந்து ஒருவருக்கே சீட் வழங்கி வருவது பலவீனம் .
அதிமுக வேட்பாளரை பொருத்தவரை கடந்த தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்காததால் ஏற்பட்ட அனுதாபம், அதிமுக மற்றும் பாமகவின் வாக்கு வங்கி பலம். முதலியார்களின் வாக்கு கூடுதல் பலம் . அதிமுகவில் இருந்து சமீபத்தில் பிரிந்து சென்ற ரஞ்சித்குமார் அமமுக சார்பில் போட்டியிடுவது பலவீனம். ரஞ்சித்குமார் வாலாஜாபாத் ஒன்றியத்தில் அதிமுகவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்துவார். அமமுக பிரிக்கும் வாக்குகள் அதிமுகவிற்கு பாதகமாகலாம் என்கின்றனர். குடவோலையில் தேர்தல் நடத்திய பகுதியில் இவிஎம் மிஷின் முடிவுகள் நாளை தெரியவரும்.