இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களிலேயே, மேற்கு வங்கம் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. அங்கு, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக 4-வது முறையாக ஆட்சியமைக்க போட்டியிடும் நிலையில், இந்த கிழக்கு மாநிலத்தில் தனது முதல் அரசாங்கத்தை அமைக்க பாஜக போராடி வருகிறது.
இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை
மேற்கு வங்கத்தில், ஏப்ரல் 23-ம் தேதி 152 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில், மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் 93.17 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, 7 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள 142 சட்டமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 29-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஒரு தொகுதியில் ரத்தான தேர்தல்
அதில், ஃபால்டா தொகுதிக்கு உட்பட்ட சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் வந்ததையடுத்து, அங்க மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் 21-ம் தேதி அங்குள்ள 285 வாக்குச்சாவடி மையங்களிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் மே 24-ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொன்னது என்ன.?
இந்த சூழலில், கடந்த 29-ம் தேதி மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. மொத்தமுள்ள 294 இடங்களில், பெரும்பான்மையை பெற 148 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இந்நிலையில், Peoples Pulse நடத்திய கருத்துக் கணிப்பில், திரிணாமுல் காங்கிரஸ் 177 - 187 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், Chanakya Strategies, Matrize, P-MARQ, Poll Diary, Praja Poll ஆகியவை வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், பாஜக பெரும்பான்மையை பிடித்து ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
வெற்றியை தீர்மானிக்கும் 37 தொகுதிகள்
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில், பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 148 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால், வெற்றியை தீர்மானிக்க உதவும் 37 "முன்னறிவிப்புத் தொகுதிகளை" தேர்தல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
1977-ம் ஆண்டு முதல், இந்த இடங்களில் பெரும்பான்மையை வெல்லும் கட்சியே மாநிலத்தில் ஆட்சி அமைத்து வருகிறது என்று கூறப்படுகிறது. இந்த 37 இடங்கள்,மாநிலம் முழுவதும் பரவியுள்ளன. மேலும், பொது, பட்டியல் சாதி (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) என அனைத்து வகையான இடங்களையும் இவை உள்ளடக்கியுள்ளன. இந்த தொகுதிகளில் சுமார் 15 முதல் 20 சதவீதம், மத்திய கொல்கத்தா, தெற்கு வங்காளம் மற்றும் தென்மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் உள்ளன. பவானிபூர், டைமண்ட் ஹார்பர், ஆஸ்கிராம், உதய நாராயண்பூர் மற்றும் மக்ரஹாட் கிழக்கு போன்ற தொகுதிகள் பெரும்பாலும் வெற்றியின் போக்கை தீர்மானிக்கின்றன.
கடந்த சுமார் 50 ஆண்டு காலமாக, இந்த மாநிலம் பெரும்பாலும் இரண்டு கட்சிகளால் ஆளப்பட்டது. அதாவது, 34 ஆண்டுகள் இடது முன்னணி, பின்னர் திரிணாமூல் காங்கிரஸ். அங்கு அரசுகள் அடிக்கடி மாறாததால், இந்தத் தொகுதிகளில் பலவற்றில் உள்ள மக்கள், மாநிலம் முழுவதும் பிரபலமாக இருக்கும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து பழகிக்கொண்டனர். அதனால், மேற்கு வங்கம் முழுவதும் ஆளும் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இந்த தொகுதிகளிலும் அதே விதமாகவே வாக்குகள் அளிக்கப்பட்டன. காலப்போக்கில், இது ஒட்டுமொத்த தேர்தல் முடிவின் வலுவான குறிகாட்டிகளாக இவற்றை மாற்றியது.
இதனால், இந்த 37 தொகுதிகலும் வாக்கு எண்ணிக்கையின்போது நிபுணர்களால் முக்கியமாக பார்க்கப்படும். அந்த முடிவுகளே வெற்றியையும் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
