தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து வரும் சூழலில், மேற்கு வங்கத்தில் இன்று 152 தொகுதிகளில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைக் காட்டிலும் மேற்கு வங்கம் மிகவும் பதற்றமான மாநிலமாகவே கருதப்படுகிறது. இதனால், அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு:
மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேற்கு வங்கத்தில் தற்போது நடக்கும் முதற்கட்ட தேர்தலில் குமர்கஞ்ச் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும். அந்த மாநிலத்தில் உள்ள தக்ஷின் தினஜ்புர் மாவட்டத்தில் இந்த தொகுதி அமைந்துள்ளது.
நேரில் சென்ற பாஜக வேட்பாளர்:
அந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுபேந்து சர்காருக்கு அந்த தொகுதியில் 10ல் 8 வாக்குச்சாவடிகளில் பாஜக பூத் ஏஜெண்ட்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 24க்கு பாஜக வேட்பாளர் சுபேந்து சர்கார் சென்றுள்ளார். அப்போது, அங்கே இருந்த சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் பின்னர், அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துணையுடன் சென்றபோதும் அவரை சிலர் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அடித்து விரட்டிய ஆளுங்கட்சியினர்:
பின்னர், வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சிலர் எம்எல்ஏ வேட்பாளர் என்றும் பாராமல் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பின்னர், அவர்களது தாக்குதலுக்கு அஞ்சி அவர் தனது பாதுகாப்பு வீரருடன் சேர்ந்து தனது காருக்கு ஓடினார். ஆனாலும், அவரை வழியில் ஒருவர் மடக்கி மீண்டும் கும்பலாக தாக்கினர். அவரைத் தாக்கியவர்கள் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசின் டோரஃப் ஹொசைன் மோண்டால் பாஜக வேட்பாளர் மானஸ் சர்காரை வீழ்த்தி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அவர் 29 ஆயிரத்து 367 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த சம்பவம் குறித்து பாஜக வேட்பாளர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
Tamil Nadu Election 2026 LIVE: தமிழக சட்டமன்ற தேர்தல்.. வாக்கு சதவிகிதத்தில் மிகப்பெரிய மாற்றம்!
