தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் பலரும் தவெக தலைவர் விஜயை குறிப்பிட்டு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய  நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்கினை செலுத்தி வருகின்றனர். அதேபோல் சினிமா, அரசியல் என பல துறைச் சார்ந்த பிரபலங்களும் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அஜித்குமார், ரஜினிகாந்த், தனுஷ், விக்ரம், கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். 

பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

இதனிடையே வெளியூரில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஆர்வம் காட்டினர். இதனால் கடந்த 2 நாட்களாக ரயில் மற்றும் பேருந்து மூலம் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். ஆனால் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என கூறி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பெருநகரங்களிலிருந்து மக்கள் அவரவர் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க, போதிய பேருந்துகள் இல்லாமல் பேருந்து நிலையங்களில் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மதியம் வரை இந்த பிரச்னை தீராமல் இருப்பதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். சிலர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல திட்டமிட்ட நிலையில், பேருந்துகள் இல்லாததால் தங்கள் திட்டத்தை கைவிட்டு வீடு திரும்பியுள்ளனர். தவெக தலைவர் விஜய், பாஜக நிர்வாகி அண்ணாமலை உள்ளிட்டோர் பேருந்துகளை அதிகளவில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

விஜயிடம் மன்னிப்பு கேட்கும் ஆதரவாளர்கள்

வெளிநாடு, வெளியூரில் இருந்து வாக்களிக்க ஊருக்கு செல்ல திட்டமிட்டவர்கள் கடைசி நேரத்தில் செல்ல முடியாத ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் விஜயிடம் மன்னிப்பும் கேட்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. சிலர் எழுத்து ரீதியாக பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர். 2021 சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும்போது 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பகல் 1 மணி நேர நிலவரப்படி தமிழ்நாட்டில் 56.81 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் 5 மணி நேரம் இருப்பதால் நிச்சயம் இந்த முறை வாக்குப்பதிவு மிகப்பெரிய சாதனையாகவும், மே 4ம் தேதிக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்பாராத ஒன்றாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது.