விழுப்புரம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறுவதால், வாக்கு பதிவு நடைபெறும் மையங்களுக்கு மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பட்டு தயார் நிலைபடுத்தப்பட்டு வருகின்றன. அதன் படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், கோட்டகுப்பம் ஆகிய மூன்று நகராட்சிகள் உட்பட, மரக்காணம், விக்கிரவாண்டி, வளவனூர், செஞ்சி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள் என 10 இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.




விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 210 காலிஇடங்களில், அரகண்டநல்லூர் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சியில் இரண்டு பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இதனால், 208 பதவிகளுக்கு தேர்தல் நாளை நடைபெறுகிறது. இத்தேர்தலில் 935 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 346 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 64 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்த வரை, ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 22 ஆண் வாக்காளர்கள் மற்றும் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 109 பெண் வாக்காளர்கள் மற்றும் 55 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 186 பேர் வாக்களிக்க உள்ளனர். விழுப்புரம் நகராட்சி பொறுத்தவரை 42 வார்டுகளுக்கு 129 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் நகரில் மட்டும் 23 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்டறியப்பட்டுள்ளன.




வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் உபகரணங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்தர் ஷா தலைமையில் அனுப்பும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளை பத்து மண்டலங்களாகப் பிரித்து, ஒரு மண்டலத்திற்கு ஒரு மண்டல தேர்தல் அலுவலர், ஒரு உதவி மண்டல தேர்தல் அலுவலர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில், 204 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண