Vilavancode Assembly Constituency: மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் முன்னாள் அமைச்சர்கள், பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் என பலரும் பா.ஜ.க.வில் இணைந்து வருவது எதிர்க்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து வருகிறது.


விளவங்கோடு:


இந்த நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்காக மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி ஓரிரு தினங்களுக்கு முன்பு, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்ததையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியும் அவரை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது.


இதையடுத்து, விளவங்கோடு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். பொதுவாக ஒரு மக்களவைத் தொகுதியோ, சட்டமன்ற தொகுதியோ காலியானால் அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. தற்போது விளவங்கோடு தொகுதி காலியாகி இருப்பதால், அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலா?


இதனால், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படுவதுடன், தேர்தல் செலவும் குறையும் என்று கருதப்படுகிறது. இல்லாவிட்டால் தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டால் கூடுதல் செலவு ஏற்படும்.


இதனால், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது விளவங்கோடு இடைத்தேர்தலுக்குமான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு இன்னும் தி.மு.க. கூட்டணியில் முடிவடையாகாத காரணத்தால், விளவங்கோடு தொகுதி காங்கிரசுக்கே ஒதுக்கப்படுமா? தி.மு.க. போட்டியிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


மீண்டும் கைப்பற்றுமா காங்கிரஸ்?


விளவங்கோடு தொகுதி தற்போது காலியாக இருப்பதால் மீண்டும் அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் காட்டும் என்றே கருதப்படுகிறது. அதேசமயத்தில் காலியாகியுள்ள விளவங்கோடு தொகுதியை கைப்பற்ற எதிர்க்கட்சிகளும் மும்முரம் காட்டும் என்பதால் அவர்கள் இந்த தொகுதியை கைப்பற்ற ஆர்வம் காட்ட தீவிர முனைப்பு காட்டுவார்கள் என்றும் கருதப்படுகிறது.


மேலும் படிக்க: விட்டுவிடுங்கள் என கெஞ்சியபோதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர் - மீனவர் கண்ணீர் பேட்டி


மேலும் படிக்க: அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு ரெடியான காங்கிரஸ்.. 7-வது மாநிலத்தை குறிவைக்கும் I.N.D.I.A கூட்டணி!