விக்கிரவாண்டியில் பாமக கூட்டத்திற்கு பொதுமக்களை செல்லவிடாமல் திமுகவினர் பொதுமக்களை பட்டியில் அடைத்து வைப்பதாக பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்தார்.


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேமூர் பகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார். அண்ணாமலை பேசிக்கொண்டு இருந்தபோது பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரத்திற்காக வேறொரு இடத்திற்கு சென்றபோது அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அண்ணாமலையை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி அண்ணாமலையின் பிரச்சார வாகனத்திற்கு சென்று கொட்டும் மழையில் இருவரும் பிரச்சாரம் செய்தனர்.
 


இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியின் அட்டூழியம் நடக்கும், விக்கிரவாண்டியில் அதற்கும் மேல் சென்று பாமக கூட்டத்திற்கு செல்லாமல் தடுக்க பணம் கொடுக்கிறார்கள். பாமக வேட்பாளார் வெற்றிபெற்றால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை. ஆனால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவராக மருத்துவர் ராமதாஸ் இருக்கிறார். மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைத்துள்ளார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். திமுக பிடியில் இருந்து மக்கள் தப்பித்து வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும். இடைத்தேர்தலாக இருந்தாலும் முக்கியமான தேர்தல். 2026க்கு தேர்தலுக்கு இந்த தேர்தல் பிள்ளையார் சுழி. இந்த மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் விழுப்புரம் மாவட்டமும், விக்கிரவாண்டி தொகுதியும் வளர்ச்சியடையவில்லை. கடந்த ஆண்டு கள்ளச்சாரயம் குடித்து 22 பேர் இறந்தனர். இதற்கு காரணமான மருவூர் ராஜா அமைச்சர் மஸ்தானுக்கு வலதுகரமாக இருந்தவர். தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 64 பேர் உயிரிழந்துள்ளனர்.


ஆனால் முதல்வர் ஆறுதல் சொல்ல செல்லவில்லை. மக்களை பட்டியில் அடைப்பதுதான் நமது கலாச்சாரமாக இருக்கிறது. இது சாதாரன தேர்தல் இல்லை. இன்றைக்கு நந்தன் காவல்வாய் திட்டம்முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என பல ஆண்டு கோரிக்கை. இன்றைக்கு திமுக ஆறாவது முறையாக ஆட்சியில் உள்ளது. ஆனால் நிறைவேற்றவில்லை. அரசு கலை கல்லூரி துவங்குவோம் என வக்குறுதி கொடுத்தது. ஆனால் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. பாமக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட காரணம் மதுவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக.


23 அமைச்சர்கள் இன்றைக்கு விக்கிரவாண்டி தொகுதியில் உள்ளனர். அமைச்சர்களே மதுபாட்டிலோடு சுற்றி வருகிறார்கள். நாம் மாம்பழத்தோடு சுற்றி வருகிறோம். ஒவ்வொரு கிராமமும் வளர வேண்டும் என்பது மோடியின் கனவு, அதற்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். பிரச்சாரத்திற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் பாமக, பாஜக தொண்டர்கள் கடுமையாக போராடி, திமுக என்ன செய்தாலும் அதனை முறியடித்து தமிழகத்தில் ஒரு அரசியல் சரித்திரத்தை எழுதப்போகிறோம் எனப் பேசினார்.