விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த ஸ்ரீ மதியின் தாயார் செல்வி சாதாரண மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்றால் அதிகாரம் கையில் இருக்க வேண்டும் என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகவும் இடைத்தேர்தலில் வெற்றி பெற மடிப்பிச்சையாக விக்கிரவாண்டி தொகுதி மக்களிடம் வாக்குகளை கேட்பதாக தெரிவித்துள்ளார்.


"மடிப்பிச்சையாக மக்களிடம் வாக்கு கேட்பேன்"


விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனு தாக்கல் 24 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்கள் 26ஆம் தேதி திரும்ப பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இறுதி நாளான நேற்று விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் கள்ளக்குறிச்சி கனியாமூரில் மறைந்த தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி  நேற்று மனு தாக்கல் செய்தார்.


மனு தாக்கல் செய்த பின் பேட்டியளித்த ஸ்ரீமதியின் தாயார் செல்வி, கடந்த இரண்டு வருடங்களாக அளவில்லா கஷ்டத்தை அனுபவித்து வந்ததாலும் சாதாரண மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்றால் அதிகாரம் கையில் இருக்க வேண்டும் என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகவும் இடைத்தேர்தலில் வெற்றி பெற மடிப்பிச்சையாக விக்கிரவாண்டி தொகுதி மக்களிடம் வாக்குகளை கேட்பதாக தெரிவித்துள்ளார்.


64 பேர் வேட்புமனு தாக்கல்


விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த பத்தாம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி தொடங்கி நேற்று மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மாலை 3 மணி வரை திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட  64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


இவர்களில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 242வது முறையாகவும். அக்னி ஆழ்வார் 51வது முறையாகவும். நூர் முகமது 44 வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியும் இறுதி நாளான நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.


வருகின்ற 24 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான இறுதி நாளாகும் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த மாதம் பத்தாம் தேதி தேர்தலும், 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.