விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். புகழேந்தி மறைவையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலின்போதே விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை.


இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14-ம் தேதி தொடங்குகிறது. விக்கிரவாண்டி இடைதேர்தலில் அன்னியூர் சிவாவை திமுக வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது.


இந்த நிலையில், கடந்த மே மதாம் 13ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிட முடிவு செய்யப்படும் என கூறியிருந்தார்.


இந்த நிலையில், நாளை பாமக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட்டால் மாவட்ட செயலாளர் புகழேந்தி, தங்க ஜோதி, பனையபுரம் அன்புமணி இவர்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளது. வன்னியர் வாக்குகள் நிறைந்த பகுதி என்பதால் பாமக தீவிரமாக தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. இருப்பினும் பாமக முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.