விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்கத் துணைத் தலைவர் சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிட இருப்பதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தற்போது விக்கிரவாண்டியில்  மும்முனைப் போட்டி உறுதியாகி உள்ளது.


இத்தேர்தலில் வன்னியர்களின் வாக்குகள் மற்றும் பிற சமூக வாக்குகளைப் பெறுவதற்காக இத்தொகுதியில் உள்ள 103 ஊராட்சிகளில் பாமகவினர் முகாமிட்டு, திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும் பாமக தனி குழு அமைத்து திட்டமிட்டுள்ளது. மாநில, மாவட்ட அளவில் உள்ள அனைத்து நிர்வாகிகளின் தலைமையில் கிராமம் தோறும் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணியாற்ற உள்ளனர்.


தினமும் காணொளி காட்சிவாயிலாக மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கிராம அளவிலான தேர்தல் பணிக் குழுக்களிடம் பேசுவார்கள். மேலும் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் விரைவில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இத்தேர்தல் மற்றொரு பென்னாகரம் இடைத்தேர்தல் போல் இருக்கும். திமுக நினைப்பது போல இது சாதாரண தேர்தலாக அமையாது என தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 2010-ம் அண்டு நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 77,637 வாக்குகளும், பாமக வேட்பாளர் தமிழ்க் குமரன் 41,285 வாக்குகளும் பெற்றனர். அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் உட்பட 29 வேட்பாளர்கள் டெபாசிட் தொகை இழந்தது குறிப்பிடத்தக்கது.


அதிமுக வாக்கு யாருக்கு ?


கடந்த 2008-ம் உருவான விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி 78 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றது. 2016-ம் ஆண்டு தேர்தலில், திமுக-விடம் அதிமுக தோல்வி அடைந்தாலும், கிட்டத்தட்ட 57 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. ஆனால், 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த அதிமுக, 1 லட்சத்து 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அபார வெற்றிப் பெற்றது. ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில், இத் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தாலும், 84 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் பெற்று, திமுக-வின் புகழேந்திக்கு கடும் போட்டியைத் தந்தது. எனவே, இந்த தொகுதியில், அதிமுக வாக்கு வங்கி என்பது குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


பாமகவிற்கு அதிமுக ஆதரவு ?


இந்தத் தொகுதியில் உள்ள அதிமுக வாக்குவங்கி, எந்தக் கட்சிக்கு போகப்போகிறது, ஆளும் திமுக-விற்கா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக-விற்கா, அல்லது நாம் தமிழருக்கா, அல்லது சுயேச்சைகளுக்கா அல்லது நோட்டாவிற்கா என்பதான் மிகப்பெரிய கேள்வி. பொதுவான கணிப்பில், தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களித்தவர்கள், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. இந்த வாக்குகள், பாமக மற்றும் நாம் தமிழர் போன்றவர்களுக்குச் செல்ல அதிகம் வாய்ப்பு இருக்கிறது, மேலும் அதிமுகவினர் மறைமுகமாக பாமகவிற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாமக


வேப்பாளர் நேற்றியதினம் பாமக அறிவித்த நிலையில், இன்று அதிகாலையே வேட்பாளர் சி. அன்புமணி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். மேலும் விக்கிரவாண்டி 2016ல் தனித்து களம்கண்ட பொழுது அன்புமணி சுமார் 41,428 வாக்குகளை பெற்றார். பதிவான வாக்குகளில் இது 23.29 சதவீதமாகும். எனவே பெருவாரியான வாக்குகளை அன்புமணி பெற்றதால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.